அமீரக செய்திகள்

இலவச ஷட்டில் பேருந்தில் அபுதாபியின் முக்கிய இடங்களுக்குச் சென்று வரலாம்!! – எங்கே சேவை கிடைக்கும்?

அபுதாபியை சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்கள் நகரின் முக்கிய இடங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வர விசிட் அபுதாபியின் இலவச ஷட்டில் பேருந்துகளில் (Shuttle Bus) பயணிக்கலாம். இந்த ஷட்டில் பேருந்தில் வசதியான இருக்கைகள், ஏர் கண்டிஷனிங், சக்கர நாற்காலி அணுகல் மற்றும் வைஃபை அணுகல் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.

இத்தகைய ‘விசிட் அபுதாபி ஷட்டில் பஸ்’, உள்ளூர் மற்றும் சர்வதேச பார்வையாளர்களை ஃபெராரி வேர்ல்ட், லூர்வ் அபுதாபி மற்றும் ஷேக் சையது கிராண்ட் மசூதி போன்ற நகரத்தின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும்.

குறிப்பாக, visitabudhabi.ae என்ற ஆன்லைன் இணையதளம் மூலம் விடுதியில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தால் அல்லது ஏதேனும் அபுதாபியில் உள்ள சுற்றுலா இடத்திற்கு டிக்கெட்டை வாங்கியிருந்தால் மட்டுமே இந்த பேருந்தில் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும், ஷட்டில் பஸ் சேவை A மற்றும் B ஆகிய இரண்டு வழித்தடங்களில் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு வழித்தடங்களும் யாஸ் ஐலேண்ட், ஜுபைல் ஐலேண்ட், சாதியத் ஐலேண்ட், அபுதாபி சிட்டி சென்டர் மற்றும் கிராண்ட் கேனல் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ஹோட்டல்கள் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷட்டில் பஸ் செல்லும் வழித்தடங்களும் இடங்களும்:

ஷட்டில் பஸ் செல்லும் வழித்தடங்களில் ஹோட்டல்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தீம் பூங்காக்கள் போன்ற அபுதாபியின் முக்கிய ஈர்ப்புகள் அமைந்திருக்கும். அதுமட்டுமின்றி, ஷட்டில் பஸ் ஒவ்வொரு மணி நேரமும் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு சரியாக வந்து சேரும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்ப்பதன் மூலம் ஷட்டில் பஸ் வழித்தடங்கள் மற்றும் உங்கள் இலக்கை எவ்வாறு அடைவது என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

வழித்தடம் Aயில் உள்ள முக்கிய அடையாளங்கள் மற்றும் ஹோட்டல்கள்:

  • பார்க் ஹயாத் சாதியாத்
  • ரிக்சோஸ் சாதியாத்
  • சாதியாத் ரோட்டானா ரிசார்ட் & வில்லாஸ்
  • மம்ஷா அல் சாதியாத்
  • லூவ்ரே அபுதாபி
  • கஸ்ர் அல் ஹோஸ்ன்
  • எதிஹாட் டவர்ஸ்
  • கஸ்ர் அல் வதன்
  • அந்தாஸ் கேபிட்டல்
  • கேட் அபுதாபி
  • ஷேக் சையத்
  • கிராண்ட் மசூதி
  • ஷேக் சையத்
  • கிராண்ட் மசூதி

வழித்தடம் Bயில் உள்ள முக்கிய அடையாளங்கள் மற்றும் ஹோட்டல்கள்:

  • பேர்மொன்ட் பாப் அல் பஹ்ர்
  • ஷங்ரி-லா ஹோட்டல்
  • அல் கானா
  • ரிட்ஸ் கார்ல்டன் அபுதாபி
  • ஷேக் சையத் கிராண்ட் மசூதி
  • கிழக்கு மாங்குரோவ்ஸ்
  • கஸ்ர் அல் வதன்
  • லோர்வ் அபுதாபி
  • ஜுபைல் மாங்குரோவ் பார்க்
  • ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி
  • வார்னர் பிரதர்ஸ் அபுதாபி

இந்த இலவச ஷட்டில் பஸ் சேவையைப் பெற வேண்டுமெனில் பின்வரும் விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்:

1. விசிட் அபுதாபி இணையதளம் மூலம் ஒரு ஹோட்டலில் முன்பதிவு செய்வது அல்லது அபுதாபியில் உள்ள ஏதேனும் ஒரு ஈர்ப்புக்கான (attractions) டிக்கெட்டைப் பெறுவது போன்றவற்றின் மூலம் QR குறியீட்டுடன் உள்ள வவுச்சரைப் பெறலாம்.

2. பின்னர், QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், அது உங்களை ஷட்டில் பஸ்ஸின் ஆன்லைன் போர்ட்டலுக்கு அழைத்துச் செல்லும்.

3. அடுத்தபடியாக, பின்வரும் விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யலாம். அதில் முழு பெயர், மின்னஞ்சல் முகவரி, பயணிகளின் எண்ணிக்கை, நீங்கள் எமிரேட்டில் வசிப்பவரா அல்லது சுற்றுலாப் பயணியா என்பதைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பிறந்த நாட்டைத் தேர்ந்தெடுத்தல் அடங்கும்.

4. விவரங்களை உள்ளிட்டதும் ‘Let’s go’ என்ற பட்டனைத் தட்டவும்.

5. இறுதியாக, இறங்க வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்தால், இணையதளம் உங்களுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தையும், வந்து சேரும் நேரத்தையும் திரையில் காண்பிக்கும். இல்லையெனில், https://visitabudhabi.ae/en/plan-your-trip/around-the-emirate/shuttle-bus இந்த இணையதளத்தின் மூலம் பேருந்து சேவையின் முழு கால அட்டவணையையும் கிடைக்கக்கூடிய வழிகளையும் காணலாம்.

6. இலவச ஷட்டில் பஸ்ஸில் ஏறுவதற்கு முன்னதாக, விசிட் அபுதாபியிலிருந்து நீங்கள் பெற்ற QR குறியீட்டைக் காட்ட வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!