அமீரக செய்திகள்

UAE: உப்புநீரை குடிநீராக சுத்திகரிக்க புதிய ஆலையை திறந்த உம் அல் குவைன் எமிரேட்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல் குவைன் எமிரேட்டில் உப்புநீரை குடிநீராக சுத்திகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய ஆலையின் கட்டுமானப் பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 2.2 பில்லியன் திர்ஹம்கள் செலவில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம் யூனியன் நீர் மற்றும் மின்சார நிறுவனத்தால் (UWEC) செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆலை முழு உற்பத்தித் திறனுடன் ஒரு நாளைக்கு 150 மில்லியன் கேலன்களில் செயல்படத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து UWEC-இன் CEO பொறியாளர் யூசுப் அகமது அல் அலி என்பவர் செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், இந்த புதிய ஆலையின் கட்டுமானம் அனைத்தும் மிக உயர்ந்த சர்வதேச தரத்தின்படி கட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை குறைத்து தொடர்ச்சியான நன்னீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான திட்டங்களில் இந்த ஆலையும் ஒன்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் படி, விநியோக செயல்முறையானது பல காரணிகளைச் சார்ந்துள்ளது என்றும், இதன் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒதுக்கப்படும் அளவு தேவையின் அளவை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

செயல்படும் விதம்:

ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நீர் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் முக்கிய பம்பிங் நிலையங்களிலிருந்து தொடங்கி, பரிமாற்ற லைன்கள் வழியாக சேமிப்பு மையங்களுக்குச் சென்று, அங்கிருந்து விநியோக நெட்வொர்க்குகளுக்கு மற்றும் இறுதி நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுவதாக அல் அலி கூறியுள்ளார்.

குடிநீர் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய விவரக்குறிப்புகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க, நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரின் தரத்தை உறுதிப்படுத்த பாதுகாப்பான நிலையான நடைமுறைகளைப் பயன்படுத்துவதில் நிறுவனம் மிகக் கவனமாகச் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பைப் லைன்கள் மற்றும் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் மற்றும் சீரற்ற அளவீட்டு சோதனைகள் ஆகியவை இதில் அடங்கும் என்றும் மேலும், UWEC இன் நீர் தொட்டிகள் 60 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் உடையவை மற்றும் அவ்வப்போது கழுவுவதன் மூலம் தரம் வாய்ந்தவை என்றும் அவர் கூறியுள்ளளார். அதேசமயம், இந்த கழுவுதல் செயல்முறை உற்பத்தியின் அளவையோ அல்லது நீரின் தரத்தையோ பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!