ADVERTISEMENT

துபாய் RTA பேருந்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்!! ஓட்டுநரின் புத்திசாலித்தனமான செயலால் பிறந்த பெண் குழந்தை.. குவியும் பாராட்டுகள்…

Published: 9 Jun 2023, 3:56 PM |
Updated: 9 Jun 2023, 4:26 PM |
Posted By: Menaka

துபாயிலிருந்து அஜ்மானுக்கு சென்று கொண்டிருந்த RTA பேருந்தில் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண்மணிக்கு உடனடியாக உதவி செய்த 41 வயதான எகிப்திய பேருந்து ஓட்டுநரின் உணர்வுப்பூர்வச் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் அவரது புத்திசாலித்தனமான செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து RTA அளித்துள்ள தகவல்களின் படி, நேற்று முந்தைய தினம் ஜூன் 7ஆம் தேதி புதன்கிழமை காலையில் முகமது முஸ்தபா என்பவர், துபாயிலிருந்து அஜ்மானை நோக்கி டபுள் டெக்கர் எனும் இரண்டு அடுக்கு கொண்ட இன்டர்சிட்டி பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது, பேருந்தின் மேல் தளத்தில் இருந்து பயணிகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக பேருந்தை நிறுத்திய முஸ்தபா, மேல்தளத்திற்கு விரைந்து நிலைமையைக் கவனித்துள்ளார். அங்கு, ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவர், உடனடியாக பயணிகளை விலகச் சொல்லி கர்ப்பிணி பெண்ணுக்கு இடத்தை ஒதுக்கியதுடன் மற்ற பயணிகள் அனைவரையும் கீழிறங்குமாறுக் கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

மேலும், உடனடியாக RTA வின் பேருந்து இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு தகவல் அளித்த முஸ்தபா, கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி செய்ய ஆம்புலன்ஸை அவசரமாக அனுப்புமாறும், அத்துடன் பேருந்தில் பயணித்த மற்ற பயணிகளை அவர்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்ல வேறொரு பேருந்தை அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார்.

இதுபோன்ற அவசர சூழலில், புத்திசாலித்தனமாக செயல்பட்டு கர்ப்பிணிப் பெண்ணின் தனியுரிமையைப் பாதுகாத்தது மட்டுமில்லாமல், அப்பெண்ணை தனியாக விட்டு வெளியேறாமல் மருத்துவக்குழு வரும் வரையிலும் அவருடன் இருந்து ஆறுதல் அளித்துள்ளார்.

ADVERTISEMENT
பேருந்து ஓட்டுநர் முகம்மது முஸ்தபா

நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான பேருந்து ஓட்டுநர் முஸ்தபா, இது குறித்து மனம் திறக்கையில், வலியால் கதறிய கர்ப்பிணிப்பெண்ணை தனது சகோதரியைப் போல எண்ணியதாகவும், பெண்ணின் மனதை அமைதிப்படுத்த நேர்மறையான விஷயங்களைக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, அவரது மனைவி பிரசவ வலியை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை நினைவில் வைத்திருந்த ஓட்டுநர், வலியைக் குறைக்கவும், பிரசவத்திற்குத் தயார்படுத்தவும் மற்றும் சுவாசத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்றும் அந்த கர்ப்பிணிக்கு பயிற்சி அளித்துள்ளார். மேலும், குழந்தையை பாதுகாப்பாக பிரசவிக்க குழந்தை பிறக்கும் செயல்முறையில் கவனம் செலுத்துமாறும் அப்பெண்ணை அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பிறந்த குழந்தை:

ஒரு வழியாக, பிரசவ வலியால் துடித்த உகாண்டாவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் பேருந்திலேயே அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இது அசாதாரண சூழலில், புத்திசாலித்தனம் நிறைந்த ஓட்டுநர் மற்றும் துணிச்சலான கர்ப்பிணித் தாயின் மத்தியில் நிகழ்ந்துள்ளது. சரியான நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது.

பெண் குழந்தை பெற்றெடுத்த உகாண்டா பெண்

குழந்தை பிறந்த அடுத்த நாளான நேற்று வியாழக்கிழமை, RTA வின் பெண் ஊழியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அடங்கிய குழு, தாய் மற்றும் மகளை சந்தித்து வாழ்த்துகளை கூறியுள்ளனர். மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் RTA வில் பொதுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் முஸ்தபாவிற்கும் RTA வும், பொதுமக்களும் தங்களின் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.