ADVERTISEMENT

UAE: கட்டிட தீ விபத்தில் எரிந்து நாசமான 64 அபார்ட்மெண்ட்ஸ் மற்றும் 10 வாகனங்கள்..!! ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்ட குடியிருப்பாளர்கள்..!!

Published: 28 Jun 2023, 1:38 PM |
Updated: 28 Jun 2023, 1:58 PM |
Posted By: Menaka

அஜ்மானில் நேற்று செவ்வாய்க்கிழமையன்று ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தானது, தீயணைப்பு அதிகாரிகளின் கடுமையான பல போராட்டங்களுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அஜ்மான் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதிகாரிகளின் கூற்றுப்படி, அஜ்மான் ஒன் (Ajman One) வளாகத்தின் டவர் 2 இல் தீ விபத்து ஏற்பட்டது. சிறிதாக ஏற்பட்ட இந்த தீ விபத்தானது சில மணி நேரங்களில் கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் பரவ ஆரம்பித்ததில், அந்த கட்டிடத்தில் உள்ள மொத்தம் 64 அபார்ட்மெண்ட்ஸ் மற்றும் கட்டிடத்திற்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த அஜ்மான் எமிரேட்டின் சிவில் பாதுகாப்பு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் முயற்சியால் குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதியில் எரிந்த தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து அஜ்மான் காவல்துறையின் தலைமை இயக்குனரான பிரிகேடியர் அப்துல்லா சைஃப் அல் மத்ரூஷி அவர்கள் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற நடமாடும் காவல் நிலையம் மூலம், குடியிருப்பாளர்கள் விபத்தில் இழந்த பொருட்கள் குறித்து புகாரளிக்க சேவைகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், விபத்து ஏற்பட்ட இடத்தை பாதுகாக்கவும் நடமாடும் காவல்நிலையம் உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அஜ்மான் ஒன் டவர் 2 ல் வசித்து வந்த குடியிருப்பாளர்கள் அஜ்மான் மற்றும் ஷார்ஜாவில் உள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை ஏற்றிச் செல்வதற்காக ரெட் கிரஸண்ட் சங்கத்தின் ஒத்துழைப்புடன் அஜ்மான் போக்குவரத்து ஆணையம் ஏழு பேருந்துகளை ஏற்பாடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT