அமீரக செய்திகள்

அமீரகத்தில் திடீரென பெய்த கோடைமழை..!! வரும் நாட்களில் மழை தொடர வாய்ப்புள்ளதா..?? வானிலை மையம் அளித்த தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவாக பெய்யும் கோடைமழையானது இந்த வருடம் நேற்று (திங்கள்கிழமை) ஆரம்பித்துள்ளது. இந்த வானிலையானது ஜூன் மாதம் முழுவதும் நீடிக்கும் வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று தொடங்கிய கோடைமழையானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழையாக பெய்ததாகவும் அஜ்மானில் உள்ள முஸைரா பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பலத்த காற்றுடன் கூடிய மழையின் போது, சாலைகளில் வாகனங்கள் செல்லும் வீடியோக்களும் பள்ளத்தாக்குகளில் நீர் வடியும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இது குறித்து NCM இன் டாக்டர் அஹ்மத் ஹபீப் என்பவர் கூறுகையில், வெப்பச்சலன மேகங்கள் கோடை மாதங்களில் மழையைத் தரும் என்றும், நாட்டில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கிழக்குப் பகுதியில் வெப்பச்சலன மேகங்கள் உருவாவதன் விளைவாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுவாக ஜூன் மாதத்தில் இது வழமையான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

க்ளவுட் சீடிங் (Cloud seeding):

இத்தகைய வெப்பச்சலன மேகங்களின் மழை தாங்கும் திறன் க்ளவுட் சீடிங் செயல்முறைக்கு ஏற்றது என்று கூறப்படுகிறது. க்ளவுட் சீடிங் என்பது மேகத்தை செயற்கையாகத் தூண்டி மழையை உருவாக்கும் செயல்முறையாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1990 களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட க்ளவுட் சீடிங் செயல்முறையில், சிறிய மழைத் துளிகளைக் கொண்ட மேகத்திற்கு ஒரு விமானத்தை பறக்கச் செய்து, மழையை அதிகரிக்க வேதிப்பொருள்கள் மேகத்தின் மீது வீசப்படும்.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த மூலையிலும் ஏதேனும் வெப்பச்சலனம் ஏற்பட்டாலும், நிச்சயமாக க்ளவுட் சீடிங் முறையை மேற்கொள்வோம் என்றும் டாக்டர் ஹபீப் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!