அமீரக செய்திகள்

UAE: இன்று முதல் அமலுக்கு வந்தது மதிய நேர வேலை தடை..!! மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின் (MoHRE) உத்தரவிற்கு இணங்க, இன்று (ஜூன் 15) முதல் மதியம் 12.30 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்த வெளியில் அல்லது நேரடி சூரிய ஒளியில் வேலை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை அமல்படுத்தப்படுகிறது.

கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில், தொடர்ந்து 19 வது ஆண்டாக அமைச்சகம் ‘Midday Break’ முயற்சியை செயல்படுத்தி வருகிறது. இந்த விதிக்கு இணங்க மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். அதுபோல, தடை செய்யப்பட்ட நேரத்தில் பல தொழிலாளர்களை வேலை வாங்கும் போது அதிகபட்ச அபராதத் தொகையாக 50,000 திர்ஹம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இது போன்ற விதிமீறல்களை குடியிருப்பாளர்கள் எங்கேனும் கண்டால் 600590000 அல்லது MoHRE இன் செயலியில் புகாரளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, நேரடி சூரியக் கதிர்வீச்சில் இருந்து ஊழியர்களைப் பாதுகாக்கும் பாராசோல்களை (parasols) முதலாளிகள் வழங்க வேண்டும் என்றும் இவற்றுடன் இடைவேளையின் போது ஓய்வெடுக்க நிழலான பகுதிகள் மற்றும் மின்விசிறிகள் போன்ற போதுமான குளிரூட்டும் சாதனங்களும் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தாகத்தை தணிக்க தொழிலாளர்களுக்கு போதிய குடிநீர் மற்றும் இதர வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் இந்த மதிய ஓய்வு இடைவேளை மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவார்கள் என்று நம்புவதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

விலக்குகள்:

என்னதான் மதிய நேரத்தில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சில வேலைகளை இடையிலேயே நிறுத்தி ஒத்தி வைக்க முடியாது, அவற்றை தொடர்ச்சியாக செய்ய வேண்டிய காட்டாயம் இருக்கும். எனவே, அத்தகைய வேலைகளைக் கருத்தில் கொண்டு அவற்றிற்கு விதிவிலக்குகளை அமைச்சகம் அளித்துள்ளது.

வாட்டர் சப்ளை, மின்சாரத்தில் குறுக்கீடுகள், போக்குவரத்தை துண்டித்தல், கான்கிரீட் வேலை மற்றும் பிற முக்கிய சிக்கல்கள் போன்ற சில குறிப்பிட்ட பழுதுபார்ப்பு சேதங்களைக் கட்டுப்படுத்த தேவையான பணிகள் ஆகியவை இந்த விலக்கு அளிக்கப்பட்ட வேலைகளில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, விலக்கு அளிக்கப்பட வேலையாக இருந்தாலும் கூட, தொழிலாளர்களுக்கு போதுமான குளிர்ந்த குடிநீரை முதலாளி வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளால் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட உப்பு கலந்த நீர் மற்றும் பிற நீரேற்ற பொருட்களை வழங்குவதன் மூலம் தொழிலாளர்களின் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!