ADVERTISEMENT

இந்தியாவில் மூன்று ரயில்கள் மோதி கோர விபத்து..!! பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அமீரக அதிபர்..!!

Published: 3 Jun 2023, 4:43 PM |
Updated: 3 Jun 2023, 5:49 PM |
Posted By: Menaka

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலமான ஒடிசாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானது மட்டுமின்றி, கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். ரயில் தடம் புரண்டதால் மூன்று ரயில்கள் மோதி கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோர ரயில் விபத்து குறித்து, சனிக்கிழமையன்று இந்தியாவுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், பரிதாபமாக பலியான உயிர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும், தனது அனுதாபத்தையும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமீரக ஜனாதிபதியான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்களும் இந்த ரயில் விபத்தால் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதனை அரபு, ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தி மொழியிலும் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

 அந்த பதிவில் “இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைவரின் எண்ணங்களும் இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடமே உள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” என்று ஷேக் முகமது அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த அதிபயங்கர ரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT