அமீரக செய்திகள்

நீரில் மூழ்கும் அபாயங்களைத் தடுக்க AI டெக்னாலஜி..!! அமீரக கடற்கரைகளில் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்….

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைகளில் உள்ள கேமராக்களில் கூடிய விரைவில் புதிய AI தொழில்நுட்பம் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீரில் மூழ்கும் அபாயங்களைக் கண்டறியவும், கடற்கரைகளுக்கு வரும் நீச்சல் வீரர்களைக் கண்காணிக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

இத்திட்டத்தை நீர் பாதுகாப்பு மற்றும் முதலுதவி நிறுவனமான Blueguard, ஒரு தொழில்நுட்ப வழங்குனருடன் இணைந்து செயல்படுத்துவதாகக் கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஜூலை 25 ஆம் தேதியை நீரில் மூழ்கடிப்பதைத் தடுக்கும் நாளாகக் கடைப்பிடித்ததை முன்னிட்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் லூக் கன்னிங்ஹாம் என்பவர் பேசுகையில், கடற்கரைக்கு விடுமுறை போன்ற ஒரு பரபரப்பான நாளில், ஏராளமானோர் வருகின்றதாகவும், அவர்களைக் கண்காணிக்க ஒன்று அல்லது இரண்டு உயிர்காக்கும் காவலர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இருக்கையில், இந்தத் தொழில்நுட்பம் கடற்கரையில் எத்தனை பேர் இருக்கிறார்கள், எவரேனும் அபாயத்தில் சிக்கியுள்ளார்களா? என்பதைக் கண்டறிந்து தகவலை உடனடியாக உயிர்காக்கும் காவலருக்குத் தெரிவிக்கும் என்று விவரித்துள்ளார். மேலும், இந்த தொழில்நுட்பம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள பல கடற்கரைகளில் நிறுவப்படும் என்று கூறியுள்ளார்.

சிறிய குளம் முதல் மிகப்பெரிய கடற்கரை வரை என பல்வேறு பரிணாமங்களில் காணப்படும் தண்ணீர் மனிதனுக்கு நிறைய நன்மைகள் மற்றும் ஓய்வு எடுப்பதற்கு உற்சாகமான அனுபவத்தைக் கொடுத்தாலும், சில நேரங்களில் ஆபத்தை உண்டாக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உலகளவில் குழந்தை இறப்புக்கான பொதுவான காரணங்களில் நீரில் மூழ்குவதும் ஒன்றாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 236,000 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர். அவற்றில் ஒன்று முதல் நான்கு வயது வரை உள்ள குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயம் அதிகம் என கூறப்படுகின்றது.

இது குறித்து டாக்டர் நிஷா ரவிந்தரனின் கருத்துப்படி, ஒரு பொறுப்பான வயது வந்தவர் எல்லா நேரங்களிலும் குழந்தையுடன் இருக்க வேண்டும், பெற்றோருக்கு குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும். இடையில் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துவது அல்லது மற்றொரு உரையாடல் போன்ற மெத்தனப் போக்கு கூட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளை நீரில் பாதுகாப்பாக வைப்பதற்கான சில டிப்ஸ்கள்:

  1. எப்பொழுதும் குழந்தைகளைக் கண்காணித்துக் கொண்டே இருங்கள்.
  2. குழந்தைகள் வசதியாக நீந்த முடியும் என்பதை உறுதிப்படுத்தவும்.
  3. நீச்சல் குளங்களில் வேலிகள் மற்றும் வாயில்களை நிறுவவும்.
  4. CPR குறித்து பெற்றோர் அல்லது முதன்மை பராமரிப்பாளர் கல்வி பயிலவும்.
  5. நீர் விளையாட்டு மற்றும் நீர் தொடர்பான நடவடிக்கைகளின் போது லைஃப் ஜாக்கெட்டுகளைப் பயன்படுத்தவும்.
  6. நீரின் பாதுகாப்பைப் பற்றி குழந்தைகளுடன் பேசுங்கள் மற்றும் ஒரு குளத்தில் ஏறும்போதும் வெளியே வரும்போதும் குழந்தைகளை உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்த்து விடவும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!