அமீரக செய்திகள்

துபாயில் 3D பிரிண்ட்டிங் முறையில் கட்டப்படவுள்ள முதல் குடியிருப்பு வில்லா.. அனுமதிக்கான முதல் உரிமத்தை வழங்கிய துபாய் முனிசிபாலிட்டி!!

துபாயில் 3D பிரிண்டிங் முறையில் தனியார் குடியிருப்பு வில்லாவைக் கட்டுவதற்கான முதல் உரிமத்தை வழங்குவதாக துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. 3D தொழில்நுட்பத்தில் கட்டப்படவுள்ள இந்த பிரைவேட் வில்லா துபாயின் அல் அவிர் 1 பகுதியில் அமைந்துள்ளதாகவும், இது ஒரே அமர்வில் அச்சிடப்படும் என்றும் துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.

குறிப்பாக, நான்கு மீட்டர் உயரமான இந்த கட்டமைப்பு ஒரே அமர்வில் பிரிண்ட் செய்யப்படும். அத்துடன், முழுவதுமாக உள்ளூரில் இருந்து பெறப்பட்ட கான்கிரீட்டால் கட்டப்படும் இந்த வில்லா அக்டோபர் 2023 ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

துபாயின் 3D பிரிண்டிங் உத்தி, 2030 ஆம் ஆண்டிற்குள் எமிரேட்டில் செயல்படுத்தப்பட்ட 3D- பிரிண்டட் கட்டிடங்களின் குறைந்தபட்ச விகிதத்தை 25 சதவீதமாக எட்டுவதை நோக்கமாகக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3D பிரிண்டட் வில்லாக்களை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் தங்கள் கட்டிட நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தை பின்பற்றவும் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் ஊக்கமளிக்கும் என்று பில்டிங் ரெகுலேஷன் மற்றும் பெர்மிட் ஏஜென்சியின் CEO மரியம் அல் முஹைரி என்பவர் கூறியுள்ளார்.

குறைந்த செலவில் துல்லியமான கட்டுமானம்:

துபாய் 3D பிரிண்டிங் உத்தி மற்றும் கட்டுமானப் பணிகளில் முப்பரிமாண அச்சுப்பொறியைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்தும் 2021 ஆம் ஆண்டின் ஆணை எண் (24) இன் படி, கட்டிடம் மற்றும் கட்டுமானத்தில் இந்த புதுமையான தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முனிசிபாலிட்டி ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குகிறது.

இந்த 3D பிரிண்டிங் கட்டுமானத்தில், கட்டுமானப் பணிகளுக்கான தேவைகள் குறைக்கப்படுவதால், குறைந்த செலவு, குறுகிய கட்டுமான நேரம், சிக்கலான வடிவ கட்டமைப்புகளை எளிதாக்குதல் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விளைவாக பல்வேறு பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை அடையலாம்.

அதுமட்டுமின்றி, கட்டுமானத் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் தேவையில்லை. ஆகவே, 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் பாரம்பரிய கட்டுமான முறைகளை விட வேகமாகவும் துல்லியமாகவும், அதே நேரத்தில் குறைந்த செலவீனம் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

3D பிரிண்டிங்கின் முன்னோடி!!

துபாய் முனிசிபாலிட்டி, 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்த பொறியியல் ஆலோசனை செயல்பாடு, 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் கட்டுமான ஒப்பந்த செயல்பாடு மற்றும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுமானத்திற்கான கான்கிரீட் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்நுட்ப செயல்பாடுகளை கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு முன்னதாக, மே 2016 இல் முதல்முறையாக உலகின் முதல் 3D பிரிண்டட் முழு செயல்பாட்டு அலுவலகமான ‘Office of the Future’ என்ற அலுவலகத்தை துபாய் திறந்தது. மேலும், எமிரேட்ஸ் டவர்ஸின் வளாகத்தில் உள்ள இந்த தனித்துவமான கட்டிடத்தை அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் திறந்து வைத்தார்.

இதனையடுத்து, உலகின் முதல் 3D-பிரிண்டட் முறையில் கட்டப்பட்ட வணிகக் கட்டிடத்திற்கான கின்னஸ் உலக சாதனையையும் துபாய் படைத்தது. மேலும் இந்த கட்டிடத்தில் தான் துபாயின் எதிர்கால திட்டங்களை பிரதிபலிக்கும் Dubai Future Foundation அலவலகமும் அமைந்துள்ளது.

அடுத்தபடியாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, துபாய் இரண்டாவது மற்றும் மிகப்பெரிய 3D பிரிண்டட் கட்டிடத்தை திறந்தது. துபாய் முனிசிபாலிட்டியின் இரண்டு மாடி கட்டிடம், உலகின் மிகப்பெரிய 3D பிரிண்டட் கட்டமைப்பாக கின்னஸ் உலக சாதனையைப் பெற்றது. தற்போது, அல் வார்சனில் அமைந்துள்ள இது துபாய் முனிசிபாலிட்டியின் இன்னோவேஷன் சென்டராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!