ADVERTISEMENT

துபாய்: 250,000 திர்ஹம் விலையுள்ள வாட்ச்சை கடலில் தொலைத்த சுற்றுலா பயணி.. மீட்டுக் கொடுத்த துபாய் போலீஸின் டைவர்ஸ் குழு!!

Published: 2 Jul 2023, 10:11 AM |
Updated: 2 Jul 2023, 10:59 AM |
Posted By: Menaka

துபாயில் உள்ள பாம் ஜூமைரா கடலில் நண்பர்கள் குழு ஒன்று படகு பயணத்தை அனுபவித்துக் கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவர் 250,000 திர்ஹம் மதிப்புள்ள விலையுயர்ந்த ரோலக்ஸ் கடிகாரத்தை கடலுக்குள் தவறவிட்டுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் துபாய் காவல்துறையின் டைவர்ஸ் குழுவினர் அதனை கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து படகு பயணம் செய்தவர்களில் ஒருவரான அமீரக நாட்டைச் சேர்ந்த ஹமித் ஃபஹத் அலமேரி என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடிகாரத்தை பறிகொடுத்தவரான அவரது நண்பர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி என்றும், அவர் நீரில் மூழ்கி நீந்தியபோது அவரது மணிக்கட்டில் உள்ள கடிகாரம் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது, நீரின் ஆழமும் அதிகமாக இருந்ததால், கடிகாரத்தைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று உடனிருந்த நண்பர்கள் எண்ணியதாகக் கூறினார். ஆனால், அலமேரி துபாய் காவல்துறைக்கு போன் செய்து நடந்தவற்றை விளக்கமாக விவரித்துள்ளார்.

ADVERTISEMENT

அதனையடுத்து, சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துபாய் காவல்துறையின் டைவர்ஸ் குழு, கடலுக்கடியில் 30 நிமிடமாக தீவிரமாக தேடியுள்ளனர். பின்னர் இறுதியாக தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அந்த விலையுயர்ந்த கடிகாரத்தை மீட்டெடுத்துள்ளனர்.

இறுதியாக, துபாய் காவல்துறை குழு தேடிக் கண்டுபிடித்த கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டு வருவதை பார்த்ததும், அலமேரியும் அவரது நண்பர்களும் ஆராவரமாகக் கூச்சலிட்டு, கைத்தட்டி ஆனந்தத்தை வெளிப்படுத்தியதுடன் காவல்துறைக்கு சல்யூட் அடித்து தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

எத்தனை அடி ஆழத்தில் இருந்தாலும் கூட, மதிப்புமிக்க பொருட்களை துபாய் காவல்துறை மீட்டுத் தருவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஏற்கனவே, 2021 ஆம் ஆண்டில், ஹத்தா அணையின் ஆழமான பகுதியில் தனது உடைமைகள் அனைத்தையும் பறிகொடுத்த நபரின் பொருட்கள் அனைத்தையும் துபாய் காவல்துறை பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்துள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டு, ஒருவர் அணையில் கயாக்கிங் செய்யும் போது, தனது ஐடி, கிரெடிட் கார்டுகள், ஒரு வாகன சாவி மற்றும் இரண்டு தொலைபேசிகளை தவறவிட்டுள்ளார். அவையனைத்தையும் கூட துபாய் காவல்துறையின் டைவர்ஸ் குழு பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.