அமீரக செய்திகள்

அமீரகத்திற்கு அரசு முறை பயணமாக வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!! ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தகவல்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு முறை பயணமாக வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பிரதமர் மோடி அடுத்த சனிக்கிழமையன்று அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு அவர்கள் இருவரும் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இது குறித்து விரிவாக விவரித்த அமைச்சகம், இந்தியா, அமீரகம் இடையேயான விரிவான கூட்டாண்மை சீராக வலுவடைந்து வருகின்ற நிலையில், பிரதமரின் தற்போதைய வருகையானது, ஆற்றல், கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, ஃபின்டெக், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் இதை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகளை அடையாளம் காண ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், அமீரகத்தின் COP28 பிரசிடென்சியின் UNFCCC மற்றும் இந்தியாவின் G-20 பிரசிடென்சியின் பின்னணியில் அமீரகம் சிறப்பு அழைப்பாளராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்ததாக, வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் (Bastille Day Parade) கெளரவ விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

மேலும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அவர்களை முறைப்படி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. அதேவேளை பிரான்சில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்திய மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களின் CEOக்கள் மற்றும் முக்கிய பிரெஞ்சு பிரமுகர்களுடன் தனித்தனியாக உரையாடுவார் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!