அமீரக செய்திகள்

துபாய்: அந்த மனசுதான் சார் கடவுள்!! குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் டாக்டர்…

துபாயில் உள்ள ஒரு மருத்துவர் குறைந்த வருமானம் கொண்ட ப்ளூ காலர் தொழிலாளர்கள் (Blue collar workers) மற்றும் வீட்டு தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவ சேவையை செய்து வருகிறார். துபாயில் இருக்கக்கூடிய மெடிசென்டர்ஸில் குடும்ப மருத்துவ ஆலோசகராகப் பணிபுரியும் டாக்டர் ஹைதர் அலி என்பவர், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசியமான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது ஓய்வு நேரத்தை விட்டுக்கொடுத்து சேவை செய்து வருகிறார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நம்முடைய இந்த நீண்ட வாழ்வில் சில நூறு திர்ஹம்களை கூடுதலாக சம்பாதிப்பது ஒன்றும் முக்கியமில்லை. என்னால் மூன்று அல்லது நான்கு பேரின் வாழ்க்கையை மாற்ற முடிந்தால், அது நல்லது” என்று நெகிழ்ந்துள்ளார். மேலும், அமீரக அரசாங்கம் மற்றும் அதன் தலைமையிடமிருந்து இரக்கத்தின் வெளிப்பாடைக் காண்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், அமீரகத்தில் உள்ள ஹெல்த் கேர் சிஸ்டத்தைப் பாராட்டிய டாக்டர் அலி,” இந்த சிஸ்டத்தின் கீழ் அனைவருக்கும் உடல்நலக் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றில் சில நபர்கள், குறிப்பாக வீட்டு அல்லது கட்டுமானத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.

அபுதாபியில் வளர்ந்த டாக்டர் அலி, மருத்துவம் கற்கும் பொருட்டு 2008 இல் இங்கிலாந்திற்குச் சென்று, அங்குள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் மருத்துவப் பயிற்சியை முடித்துள்ளார். அதன் பிறகு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

அத்துடன் டெர்மட்டாலாஜியில் முதுகலை டிப்ளமோ பெற்றுள்ள இவர், இதுவரை நான்கு மருத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய சமீபத்திய புத்தகம் துபாயில் உள்ள முகமது பின் ரஷித் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து, 2021 இல் துபாய்க்கு வந்த டாக்டர் அலி, துபாயில் குறைந்த வருமானம் பெறும் பல தொழிலாளர்களுக்கு சிறப்பு கவனிப்பு கிடைக்காமல் இருப்பதை கவனித்திருக்கிறார். அவ்வாறு கடுமையான இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் வீட்டுப் பணிப்பெண் எல்மா என்பவர், டாக்டர் அலி வழங்கிய இலவச மருந்துகள், இரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை போன்றவற்றால் பயனடைந்துள்ளார்.

டாக்டரின் உதவி குறித்து எல்மா கூறியதாவது; “நான் இப்போது நன்றாக உணர்கிறேன். அவர் இல்லையென்றால், மலிவு விலையில் எனது சோதனைகளை என்னால் செய்ய முடியாது.” என்றார்.

முதலில் அவர் தான் வசிக்கும் பகுதியில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை நோயாளிகள் அணுகியுள்ளனர். தற்போது அவர் தினசரி வழங்கும் மருத்துவ ஆலோசனைகளை தவிர்த்து மாதத்திற்கு ஆறு அல்லது ஏழு நோயாளிகளுக்கு இந்த இலவச மருத்துவம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அவரிடம் வரும் பெரும்பாலான நோயாளிகள் ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களைக் கொண்டுள்ளதாகவும் டாக்டர் அலி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மனநல மருத்துவம் தேவைப்படும் பலரை பார்த்ததாகவும் அவர் கூறினார். ஆகவே, மனநல ஆலோசனைகளையும் தற்போது அவர் வழங்கி வருகிறார். குறிப்பாக, தங்கள் குடும்பங்களை விட்டு வெகு தொலைவில் வசிப்பவர்கள் மற்றும் மன அழுத்தம் மற்றும் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு இலவச ஆலோசனையை வழங்குவதாக டாக்டர் அலி கூறியுள்ளார்.

இத்துடன் நின்று விடாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக தொழிலாளர்களுக்கு கூடைப்பந்தாட்டத்தில் பயிற்சியும் அளித்து வருகிறார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட டாக்டர் அலியின் அடுத்த இலக்கு ஒரு பாப்-அப் கிளினிக்கை திறப்பது தான். இதனால் அவர் அதிகமான மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!