வளைகுடா செய்திகள்

ஜூலை 12 முதல் ஓமான் – ஃபுஜைரா இடையே நேரடி விமான சேவையை தொடங்கும் சலாம் ஏர்..!!

ஓமான் தலைநகர் மஸ்கட்டை  தளமாகக்கொண்ட சலாம் ஏர் விமான நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவிற்கு வாராந்திர நான்கு விமானங்களைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. விமான நிறுவனத்தின் அறிவிப்பின் படி, இம்மாதம் ஜூலை 12, 2023 முதல் இந்த விமானச் சேவை தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான சேவையின் கீழ், ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் புஜைராவிற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் அமீரகம் மற்றும் ஃபுஜைராவின் தனித்துவமான கலாச்சாரம், வரலாறு மற்றும் இயற்கை அழகை பயணிகள் அனுபவிக்க சலாம் ஏர் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.

அத்துடன், விமானப் பயணிகளிடையே தற்போது அதிகரித்து வரும் விமானப் பயண விருப்பங்களுக்கான தேவைக்கு பதிலளிக்கும் வகையில் ஓமானில் இருந்து இந்த புதிய இலக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் சலாம் ஏர் விமான நிறுவனம் கூறியுள்ளது.

இது குறித்து சலாம் ஏர் நிறுவனத்தின் CEO கேப்டன் முகமது அகமது பேசுகையில், நிறுவனத்தின் விமானச் சேவையில் ஃபுஜைராவை அறிமுகப்படுத்துவது, சலாம் ஏர் நெட்வொர்க்கின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ஃபுஜைராவிலிருந்து நெட்வொர்க்கில் மிகவும் விரும்பப்படும் சில இடங்களுக்கு வசதியான இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஓமானை தளமாக கொண்டு இயங்கும் சலாம் ஏர் ஆனது, சுமார் 13 நாடுகளில் மொத்தம் 39 இடங்களுக்கு விமானச் சேவையை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!