ராஸ் அல் கைமாவில் காலாவதியான வாகனப் பதிவுகளைக் கொண்ட உரிமையாளர்களுக்கு, தங்களின் வாகனப் பதிவை புதுப்பிக்க கூடுதலாக 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று ராஸ் அல் கைமா காவல்துறையின் வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமத் துறை, இந்த ஒரு மாத கால அவகாசத்தை அறிவித்தது. அதன்படி, 30 நாள் சலுகை காலமானது ஜூலை 12, 2023 முதல் கணக்கிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த முப்பது நாள் அவகாசத்திற்கு பின், வாகனப் பதிவை புதுப்பிக்கத் தவறும் உரிமையாளர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஜனவரி 1, 2019 அன்று அல்லது அதற்கு முந்தைய காலாவதியான பதிவுகளைக் கொண்ட வாகனங்களை பதிவு நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் துறை அறிவித்துள்ளது.
ஆகையால், வாகன உரிமையாளர்கள் அலட்சியப்படுத்தாமல் ஒரு மாத கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து ஃபெடரல் சட்டத்தின்படி, காலாவதியான பதிவுடன் வாகனத்தை ஓட்டினால், 400 திர்ஹம் அபராதமும் நான்கு பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படுவதுடன் 7 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.