அமீரக செய்திகள்

வாடிக்கையாளரின் ஆர்டரை எடுத்து சாப்பிட்ட டெலிவரி ரைடரின் வீடியோ வைரல்..!! – தலாபத் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கொடுத்த விளக்கம்..

அமீரகத்தின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான தலாபத்தில் பணிபுரியும் டெலிவரி ரைடர் ஒருவர், சாலையோரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு வாடிக்கையாளரின் ஆர்டரை சாப்பிடுவதாகவும் மற்றும் பானத்தைக் குடிப்பதாகவும் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ குறித்து ட்விட்டரில் ஒருவர், டெலிவரி ரைடரின் நடத்தையைப் பற்றி கேள்வி எழுப்பியதுடன் இதனை துபாய் முனிசிபாலிட்டியின் கவனத்திற்கு கொண்டு செல்ல அதன் கணக்கை டேக் செய்து ஒரு பதிவையும் எழுதியுள்ளார்.

அதில், “இந்த வீடியோவில் சுகாதாரம் மற்றும் நேர்மையின் அளவு தெளிவாகத் தெரிகிறது. டெலிவரி ரைடரின் செயல்களுக்கு சாக்குபோக்குகளைக் கேட்க மாட்டோம், மேலும் இந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று நம்புகிறேன். அத்துடன் துபாய் முனிசிபாலிட்டி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து பொது சுகாதாரத் துறைக்கு வழிகாட்டும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நபரின் கேள்விக்கு சில நிமிடங்களில் பதிலளித்த துபாய் முனிசிபாலிட்டி, இந்த சம்பவம் குறித்து கருத்துகளை பகிரந்ததற்கு நன்றி தெரிவித்ததுடன், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றியும் விளக்கியுள்ளது.

அதாவது, இந்த வைரல் வீடியோவானது துபாயில் நடந்தது அல்ல என்பதும், பஹ்ரைனில் நடந்தது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வீடியோ குறித்து தலாபத் பஹ்ரைனின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், எங்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு எதிராக டெலிவரி ரைடர் ஒரு ஆர்டரைக் கையாளும் வீடியோவை நாங்கள் சமீபத்தில் அறிந்தோம். இது வாடிக்கையாளர் கேன்சல் செய்த ஆர்டர் என உறுதிப்படுத்தப்பட்டாலும், இந்த செயலை செய்த ரைடரை இடைநீக்கம் செய்துள்ளோம் என்று கூறியுள்ளது.

அத்துடன், இதுபோன்ற நேர்மையற்ற நடத்தைகளை கருத்தில்கொண்டு, பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து ரைடர்களுக்கும் நினைவூட்டலை அனுப்பியுள்ளதாகவும் தலாபத் பஹ்ரைன் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!