அமீரக செய்திகள்

டெலிவரி ரைடர்களை கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க அமீரகம் முழுவதும் 356 ஓய்வு நிலையங்கள்..!! அமைச்சகத்தின் முயற்சி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டெலிவரி ரைடர்களை கொளுத்தும் கோடைவெயிலில் இருந்து பாதுகாக்கவும், குறிப்பாக நண்பகல் நேரத்தில் வெப்பச் சோர்விலிருந்து ஓய்வு அளிக்கவும் அத்தியாவசிய சேவைகளுடன் கூடிய 356 ஓய்வு நிலையங்களை வழங்குவதற்கான முயற்சியை மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) அறிவித்துள்ளது.

ஏற்கனவே, அமீரகம் முழுவதும் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை மதியம் 12.30 முதல் 3 மணி வரை நேரடி சூரிய ஒளியின் கீழ் மற்றும் திறந்த பகுதிகளில் வேலை செய்ய தடை செய்யப்பட்ட மதிய நேர இடைவேளை நடைமுறையில் உள்ள நிலையில், இந்த முன்முயற்சி பற்றிய அறிவிப்பானது, டெலிவரி ரைடர்களின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

அமீரகத்தின் பிரபல டெலிவரி நிறுவனங்களான Talabat, Delivero, Noon, Careem, InstaShop மற்றும் பிற கிளவுட் கிச்சன்கள் (cloud kitchen) மற்றும் உணவகங்கள் மற்றும் விநியோக நிறுவனங்களுக்கிடையேயான அமைச்சகத்தின் கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓய்வு நிலையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதால், எந்த ஒரு டெலிவரி டிரைவரும் எளிதாக GPS மூலம் அனைத்து நிலையங்களையும் கண்டறிந்து பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சகத்தின் ஆய்வு விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலர் மொஹ்சென் அல் நஸ்ஸி அவர்கள் கூறுகையில், டெலிவரி துறையானது நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரிவு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கிய லாஜிஸ்டிக்ஸ் துறையாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, எந்த நேரத்திலும் டெலிவரி செய்ய ரைடர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவ்வாறு இருக்கையில், நாட்டில் உள்ள டெலிவரி ரைடர்கள் அவர்களின் இடைவேளையின் போது ஓய்வெடுக்க நிழல் கூடிய பகுதிகளையும், போதுமான குளிரூட்டும் சாதனங்கள் மற்றும் போதுமான குடிநீரையும் வழங்குமாறு முதலாளிகள் வலியுறுத்தப்படுகின்றனர்.

அதுபோல, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொடர்புடைய உள்ளூர் அதிகாரிகளால் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட உப்பு கலந்த நீர் மற்றும் பிற பொருட்கள் போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!