அமீரக செய்திகள்

அபுதாபியின் முதல் இந்து கோவில் திறக்கப்படும் தேதி அறிவிப்பு..!! கோவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்….

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கோவிலானது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று BAPS இந்து மந்திரின் உயர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த இளஞ்சிவப்பு மணற்கல் கோவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோவில் கட்டுவத்றகான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப்ரவரி 2018 இல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, இந்து கோவிலின் திறப்புவிழா கொண்டாட்டங்கள் மிகப்பெரிய நல்லிணக்கத்தின் திருவிழாவாக இருக்கும் என்று BAPS பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இந்தியாவின் பாரம்பரிய கலை, மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தை அமீரகத்திற்கு கொண்டு வரும் திருவிழாவாகவும் இது இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 2015 இல் அபுதாபியில் கோயில் கட்ட ஐக்கிய அரபு அமீரக அரசு நிலம் ஒதுக்கியிருந்தது. அதன்பிறகு, அரசுமுறைப் பயணமாக அமீரகத்திற்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்த நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

தற்போது, அபு முரைக்காவில் சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ள இந்த சிறப்புமிக்க ஆலயம், எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, புனித பூஜ்ய மஹந்த் சுவாமி மகாராஜ் அவர்களின் தலைமையில் வேத விழாவுடன் திறக்கப்படும் என்று கோயில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மறுநாளான பிப்ரவரி 15 அன்று, அமீரகத்திலுள்ள இந்தியர்கள் சுவாமி மகராஜ் முன்னிலையில் ஒரு பொது அர்ப்பணிப்பு சபையின் மூலம் கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். இந்த விழாவில் பங்கேற்பதற்கு முன் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, மந்திர் தலைவர் பிரம்மவிஹாரிதாஸ் சுவாமியின் மேற்பார்வையில் கட்டப்பட்டு வரும் BAPS இந்து கோவில், பிப்ரவரி 18, 2024 அன்று பொது மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளுக்கு முந்தைய நிகழ்வுகள் மற்றும் மத விழாக்களில், முன்பதிவு செய்தவர்களும் அழைக்கப்பட்டவர்களும் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதை கோயில் மீண்டும் ஒரு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

மேலும், தொடக்க விழா மற்றும் பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, Festival of Harmony என்ற ஆப்-ஐ டவுன்லோட் செய்யலாம் அல்லது https://festivalofharmony.ae/ ஐப் பார்வையிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!