அமீரக செய்திகள்

அமீரகத்தில் Annual Leave Salary எவ்வாறு கணக்கிடப்படுகிறது..? முழு சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது..?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா..?? அப்படியானால், நீங்கள் வருடாந்திர விடுப்பை எடுக்கும்போது, எத்தனை நாட்களுக்கு விடுப்பு எடுக்கலாம் மற்றும் விடுப்புச் சம்பளம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். மேலும், வருடாந்திர விடுப்பின் போது, ஊதியம் பெறவில்லை என்றால் உங்களுக்கான உரிமைகள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு ஊழியர் நிறுவனத்தில் 12 மாத சேவையை முடித்த பிறகு, 30 நாட்களுக்கு வருடாந்திர விடுப்பில் சென்றால், அவருடைய சம்பளம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது..?? இது அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையிலா (Basic salary) அல்லது வீட்டுக் கொடுப்பனவுடன் (housing allowance)அடிப்படைச் சம்பளத்தில் உள்ளதா அல்லது பிற கொடுப்பனவுகளுடன் அடிப்படைச் சம்பளத்தில் (basic salary with other allowance) உள்ளதா?? என சந்தேகம் இருக்கலாம்.

அமீரக தொழிலாளர் சட்டம் – 2021 இன் ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். 33-இன் படி, ஒரு ஊழியருக்கு வழங்கப்படும் வருடாந்திர விடுப்பு கொடுப்பனவானது, அத்தகைய விடுப்பைக் கணக்கிடும் தேதியில் பணியாளரின் சேவை காலத்தின் படி இருக்கும். அதாவது, நிறுவனத்தில் ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவைக் காலம் இருந்தால் விடுமுறை பொருந்தாது. ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை, மாதத்துக்கு இரண்டு நாட்கள் வருடாந்திர விடுப்பும், ஓராண்டு சேவையை நிறைவு செய்தால் 30 நாட்கள் விடுப்பும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதுபோல, அத்தகைய விடுப்புக் காலத்திற்கான சம்பளத்தை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பது குறித்து, அமீரக தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 29 (1)இல் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வருட சேவையை நிறைவு செய்த ஒரு ஊழியர் 30 நாட்கள் வருடாந்திர விடுப்பு எடுத்தால், தனது முழு மாதச் சம்பளத்தையும், அடிப்படைச் சம்பளம் (basic salary) மற்றும் கொடுப்பனவுகளைப் (allowance) பெறலாம்.

அதேசமயம், 12 மாதங்களுக்குப் பிறகு தனது வேலையை நிறுத்தும் பட்சத்தில், ஊழியர் வருடாந்திர விடுப்புச் சம்பளத்தைக் கோரினால், சம்பளமானது அவருடைய அடிப்படைச் சம்பளத்தில் மட்டுமே கணக்கிடப்படும் என்று பிரிவு 29 (9)இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருடாந்திர விடுப்பில் நிறுவனம் முழு சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது?

  1. அமீரக தொழிலாளர் சட்டத்திற்கு நிறுவனத்தின் முதலாளி இணங்க மறுக்கும் பட்சத்தில், ஊழியர் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்திடம் (MOHRE) புகாரளிக்கலாம். அதனைத் தொடர்ந்து அமைச்சகம், பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இரு தரப்பினரையும் தொடர்பு கொள்ளும்.
  2. பிரச்சினை சுமூகமாக முடியாத நிலையில், MOHRE அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்பி, சட்டத்தின்படி, ஊழியருக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும்.
  3. இதுபோன்ற பிரச்சனைகள் பற்றி புகாரளிக்க MOHREஇன் இணையதளத்தில் தொழிலாளர் புகார் சேவை உள்ளது, இதில் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி தெரிவிக்கலாம்.
  4. http://mobilebeta.mohre.gov.ae/mohre.complaints.app/TwafouqAnonymous2/CallerVerification இந்த லிங்க்கை கிளிக் செய்து உங்கள் புகாரைத் தெரிவிக்கலாம்.

புகாரளிப்பதற்கு வழங்க வேண்டிய விவரங்கள்:

  • லேபர் கார்டு நம்பர்
  • பாஸ்போர்ட் நம்பர்
  • முழு பெயர், பிறந்த தேதி, தேசியம் மற்றும் பாலினம்

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தனியார் துறை ஊழியராக பதிவு செய்திருந்தால், கணினி உங்களை பணியாளர் விவரங்கள் மற்றும் நிறுவனத்தின் விவரங்கள் வழங்கப்படும் ஒரு பக்கத்திற்கு எடுத்துச் செல்லும்.

அதனையடுத்து, ‘Companies’ என்பதைக் கிளிக் செய்து ‘Add complaint’ என்ற பொத்தானைத் தட்டவும். புகாரளித்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்க, MOHRE இலிருந்து டிரான்சாக்சன் நம்பரைப் பெறுவீர்கள். மாறாக, உங்களது புகாரை தெரிவிக்க MOHRE ஹெல்ப்லைன் எண்ணிற்கும் 600590000 அழைக்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!