ADVERTISEMENT

UAE: 2050க்குள் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 50% ஆக உயரும்..!! கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த புதிய கொள்கை…!!

Published: 19 Jul 2023, 7:29 AM |
Updated: 19 Jul 2023, 8:26 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் 2050ஆம் ஆண்டுக்குள் சாலைகளில் உள்ள மொத்த வாகனங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை 50% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான நேஷனல் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையின் (National Electric Vehicles Policy) விவரங்களை எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சரான சுஹைல் பின் முகமது அல் மஸ்ரூயி அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்த கொள்கையானது எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தால் (Ministry of Energy and Infrastructure – MoEI) ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அமீரக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கொள்கையானது, நாடு முழுவதும் EV சார்ஜிங் நிலையங்களின் உள்கட்டமைப்பிற்கான தரநிலைகளை சீரமைப்பதற்கு வழிகாட்டும் ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பாகச் செயல்படுவதுடன் நாடு முழுவதும் உள்ள பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை எளிதாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொள்கை EVகளின் பயன்பாட்டை ஊக்குவித்து, அவற்றின் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் பசுமை இயக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்கும். ஆகவே, இன்னும் முப்பது ஆண்டுகளில் போக்குவரத்துத் துறையில் 40 சதவீதம் ஆற்றல் நுகர்வையும், 10 மில்லியன் டன் கார்பன் உமிழ்வையும் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் பயன்பாட்டை துரிதப்படுத்தி, மின்சார வாகனங்களில் முதலீடு செய்ய வணிகத் துறையை ஊக்குவிப்பதுடன் பசுமை இயக்கத்தை மேம்படுத்தும் என்றும் அமைச்சர் சுஹைல் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளை உள்நாட்டில் மறுசுழற்சி செய்வதற்கான சட்ட மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பை அமைக்கும் என்றும் அரசு மற்றும் தனியார் துறையின் கூட்டாளர்களுடன் இணைந்து EV சார்ஜிங் நிலையங்களின் நெட்வொர்க்கை நிறுவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT