அமீரக செய்திகள்

UAE: குடியிருப்பாளர்கள் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க நடத்தப்படும் பிரச்சாரம்..!!

அமீரகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, ஷார்ஜாவின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (Mohap) எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது, குடும்ப விவகாரங்களுக்கான ஷார்ஜா சுப்ரீம் கவுன்சில் (SCFA) தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளியானது.

தற்போது, 12வது பதிப்பில் அடியெடுத்து வைத்துள்ள பிரச்சாரத்தில் கட்டுமான தளங்களுக்கான கள ஆய்வுகள் மற்றும் விழிப்புணர்வு விரிவுரைகள் ஆகியவை அடங்கும் என்றும், பிரச்சாரத்தை மேற்கொள்ளும் குழுக்கள் அதிகமாக சூரிய ஒளியில் இருப்பவர்களை அணுகும் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, அவர்களின் பணியிடங்களில் மருத்துவ உதவி மற்றும் பொருட்களை வழங்க ஒரு மருத்துவக் குழுவும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் , கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பச் சோர்வுடன் தொடர்புடைய அபாயங்களைப் பற்றிய புரிதல், வெயிலின் போது பணிச்சூழலை மாற்றியமைத்து பராமரிப்பதன் முக்கியத்துவம் போன்ற சரியான நடத்தைகளை ஊக்குவிக்கிறது. வெப்ப உயர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி நடைமுறைகள் போன்றவற்றையும் குடியிருப்பாளர்கள் அறிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி, பங்கேற்பாளர்களுக்கு தனிப்பட்ட சுகாதார கருவிகள், தீ தடுப்பு பொருட்கள் மற்றும் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு சோதனைகள் மற்றும் பல் சுகாதாரம் போன்ற மருத்துவ பரிசோதனைகளுக்கான அணுகலும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆகவே, பிரச்சாரத்தில் பங்கேற்க விரும்பும் எவரும் ஷார்ஜா அரசாங்கத்தின் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் பங்கேற்கலாம். அத்துடன், பிரச்சாரத்தில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு அரபு, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் உள்ள சிறு விழிப்புணர்வு புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் பிரதிநிதி அலுவலகத்தின் இயக்குனர் முகமது அல் ஜரோனி என்பவர் கூறுகையில், பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க பல்வேறு அரசு, தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 12வது வெப்பச் சோர்வு தடுப்பு பிரச்சாரத்தை தொடங்குவதாகவும், குறிப்பாக சூரிய ஒளியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களிடையே வெப்பச் சோர்வின் அபாயங்கள் குறித்து பிரச்சாரத்தில் கற்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஷார்ஜா காவல்துறை, ஷார்ஜா பொது சுகாதார மையம், ஷார்ஜா முனிசிபாலிட்டி, ஷார்ஜா சேரிட்டி இன்டர்நேஷனல், ஷார்ஜா கூட்டுறவு சங்கம், ஷார்ஜா ஒலிபரப்பு ஆணையம் (SBA), ஷார்ஜா தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஆணையம், கட்டிட ஒப்பந்ததாரர்கள், சூக் அல் ஜுபைல், Zulal வாட்டர் ஃபேக்டரி மற்றும் எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் அத்தாரிட்டி போன்ற ஷார்ஜாவில் உள்ள பல்வேறு பொது மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!