அமீரக செய்திகள்

கோடை வெயிலில் அதிகரிக்கும் டயர் வெடிப்புகள்!! டயர்களைச் சோதிப்பதற்கான சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்ட சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொளுத்தும் கோடை வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாண்டி 50 டிகிரி செல்சியஸ் வரை உச்சத்தை நோக்கி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் வெயில் உச்சத்தை எட்டும் போது, சாலைகளில் டயர் வெடிப்பு அபாயம் அதிகரிக்கும். ஆகவே, வாகன ஓட்டிகள் தங்கள் வாகன டயர்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

பொதுவாக, சூடான சாலையின் மேற்பரப்புடன் டயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும்போது சரியான நிலையில் இல்லாத டயர்கள் வெடிக்கின்றன. கோடைகாலங்களில் இத்தகைய அபாயத்தைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் புறப்படுவதற்கு முன்பு தங்கள் வாகனங்கள் நன்கு பராமரிக்கப்படுவதையும், டயர்கள் நல்ல நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் வாகனங்கள் சரியான நிலையில் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்கான சாலைப் பாதுகாப்பின் சரிபார்ப்புப் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

>> துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) பரிந்துரையின் படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை டயர்களை மாற்றவும் அல்லது டயர் ட்ரெட் பேண்டின் (tyre tread band) எந்தப் பகுதியிலும் மீதமுள்ள ட்ரெட் ஆழம் 1.6 மி.மீ.க்குக் குறைவாக இருந்தால் விரைவில் டயர்களை மாற்றவும் வேண்டும்.

>> அதுபோல, டயர்களின் பக்கச்சுவரில் (sidewall) ஏதேனும் விரிசல், வெட்டுகள் அல்லது டிரெட் பேண்டின் பாகங்களில் சேதம் மற்றும் தேய்மானம் போன்றவை இருந்தால், டயர்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

>> டயர்களில் காற்றிற்குப் பதிலாக நைட்ரஜனை நிரப்புவதன் மூலம், அழுத்தம் நிலைத்தன்மையை நீண்ட காலத்திற்கு பராமரிக்கலாம். வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக நைட்ரஜன் அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் குறைவாக இருக்கும். இது டயர்களில் நிலையான அழுத்தத்தை பராமரிக்க உதவும்.

>> முன்னணி பிராண்டட் மற்றும் சான்றளிக்கப்பட்ட டயர்களை பயன்படுத்துவது சிறந்தது.

>> குறிப்பாக, உங்கள் வாகனத்திற்கு ஏற்ற சரியான டயர் வகை மற்றும் பரிமாணத்தைப் பயன்படுத்தவும். இது குறித்த விபரம் உறுதியாகத் தெரியாவிட்டால் நிபுணர் ஆலோசனையைக் கேட்கவும்.

>> மாதத்திற்கு ஒருமுறையேனும் டயர் அழுத்தத்தை சரிபார்க்கவும்.

>> மேலும், வாகன உற்பத்தியாளர் பரிந்துரைத்ததை விட குறைந்த டயர் அழுத்தத்தில் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.

>> அதிகப்படியான சுமை மற்றும் டயர்களின் திறனை விட அதிக வேகத்தில் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

>> கூர்மையான பாறைகள், கண்ணாடிகள் போன்ற டயர்களை சேதப்படுத்தக்கூடிய அபாயகரமான பொருட்களின் மீது வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.

>> எப்போதும் ஸ்பேர் டயரின் நிலை மற்றும் காற்றழுத்தம் ஆகியவற்றைச் சரிபார்த்து வைக்க வேண்டும். ஏனெனில், அவசர சூழ்நிலையில் தேவைப்படும் போது, பயன்படுத்தத் தகுதியான ஸ்பேர் டயர் இருப்பது நல்லது.

Related Articles

Back to top button
error: Content is protected !!