அமீரக செய்திகள்

UAE: முட்டை மற்றும் இறைச்சிப் பொருட்களின் விலையை உயர்த்தியதால் பிடிபட்ட 125 சூப்பர் மார்க்கெட்டுகள்..!! விலையை கூட்டினால் 10,000 திர்ஹம்கள் அபராதம் எனவும் எச்சரிக்கை..!!

அமீரகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி அதிக விலைக்கு முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்ததற்காக 125 பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகள் பிடிபட்டதாக நுகர்வோர் பாதுகாப்புக்கான சுப்ரீம் கமிட்டி தெரிவித்துள்ளது.

அமீரகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 5 வரை பல்வேறு பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைப் பொருட்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சகமானது கடந்த ஏப்ரல் மாதத்தில், முட்டை மற்றும் இறைச்சிப் பொருட்களின் விலையை 13 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தி விநியோகிக்கும் விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு 10,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதம் விதிக்கப்படும் என்றும், மீண்டும் விதியை மீறுபவர்களுக்கு அபராதம் 200,000 திர்ஹம் வரை அதிகரிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மரி அவர்களின் தலைமையிலான குழு, அமைச்சர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை நுகர்வோர் பொருட்களுக்கான விலைக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் கொள்கையானது, பொருளாதார அமைச்சகத்திடம் முன் அனுமதி பெறாமல் சமையல் எண்ணெய், முட்டை, பால், அரிசி, சர்க்கரை, கோழி, பருப்பு வகைகள், ரொட்டி மற்றும் கோதுமை உள்ளிட்ட 9 அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர, பிற பொருட்களுகளுக்கான விலைகள் அதன் தேவைகேற்ப நிர்ணயிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனையொட்டி, சுமார் 365 முட்டை மற்றும் இறைச்சிப் பொருட்களின் பட்டியலை ஒவ்வொன்றிற்கும் அனுமதிக்கப்பட்ட விலைகளுடன் அமைச்சகம் வெளியிட்டது.

மேலும், இந்த முடிவுகள் மற்றும் கொள்கைகள் நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை என்று அல் மரி குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், நிர்ணயிக்கப்பட்ட விலைக் கொள்கையைச் செயல்படுத்துவதில் ஒவ்வொரு அமீரகத்திலும் உள்ள பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் துறைகளின் முக்கிய பங்கையும் அவர் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!