அமீரக செய்திகள்

அமீரகத்தில் வேலை விசாவை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டிக்க ஒப்புதல்..!! – FNC பரிந்துரைத்த பல்வேறு நடவடிக்கைகள் என்ன.?

ஐக்கிய அரபு அமீரகத்தின் நாடாளுமன்ற அமைப்பான ஃபெடரல் நேஷனல் கவுன்சில் (FNC) வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் பணி அனுமதி (work permit) காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகாளாக நீட்டிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. FNC குழுவானது பணி அனுமதி பெறுவது தொடர்பான நிதிச் செலவுகளைக் குறைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளின் கீழ் இது வந்துள்ளது.

பொதுவாக செல்லுபடியாகும் அனுமதியின்றி நாட்டில் பணிபுரிவது சட்டவிரோதமானதாகும். தற்போது, ​​ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி அனுமதி இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகின்ற நிலையில், இந்த ஆவணமானது மனித வளம் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், நிதி, பொருளாதாரம் மற்றும் தொழில்துறை விவகாரங்களுக்கான FNC குழு சமர்ப்பித்த அறிக்கையில், இந்த இரண்டு வருட கால அளவை மூன்று ஆண்டுகளாக அதிகரிப்பதற்கான பரிந்துரையும் அடங்கும். அத்துடன் பணி மாறுதலுக்கான பணி அனுமதிக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பிற பரிந்துரைகளையும் FNC முன்மொழிந்துள்ளது.

இது மட்டுமில்லாமல், தகுதிகாண் காலத்திற்குப் (probation period) பிறகு தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஒரு முதலாளியுடன் பணிபுரிய வேண்டும் என்பதும் FNC அங்கீகரித்த பரிந்துரைகளில் ஒன்றாகும். ஆனால், முதலாளி ஒப்புக்கொண்டால் இந்த தேவையை தள்ளுபடியும் செய்யலாம்.

தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான நெகிழ்வான கொள்கைகள்:

பெடரல் நேஷனல் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ​​மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சர் அப்துல்ரஹ்மான் அல் அவார் அவர்களால், அபாயங்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க நடைமுறையில் உள்ள மூன்று முக்கிய கொள்கைகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவை,

1. தொழிலாளர் பாதுகாப்பு காப்பீட்டு அமைப்பு:

ஒரு நிறுவனம் திவால் அல்லது நிலுவைத் தொகையை செலுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தால், அதன் தொழிலாளர்களைப் பாதுகாக்க காப்பீட்டுத் தொகையை வழங்க முதலாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து உள்ளனர்.

2. ஊதிய பாதுகாப்பு அமைப்பு (Wage protection system):

இது பணியாளர் சம்பளத்தை சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பான முறையில் செலுத்துவதை உறுதி செய்கிறது. இந்த அமைப்பில் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை சரியான தேதியில் வழங்க வேண்டும்.

3. வேலையியிழப்பு காப்பீடு:

இது தொழிலாளர்கள் வேலை இழந்தால் அவர்களுக்கு நிதி ஆதரவு வழங்கி அவர்களைப்  பாதுகாக்கிறது. இதுவரை 40,000 எமிரேட்டிகள் உட்பட 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் குழுசேர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சகம் நடத்திய ஆய்வுகள்:

இந்த ஆண்டு அமீரகம் முழுவதும் சுமார் 72,000 ஆய்வுப் பயணங்களை நடத்தியதாக மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் FNC-யிடம் தெரிவித்துள்ளது. இதில் போலி எமிராட்டிசேஷன் தொடர்பான 2,300 சந்தேக வழக்குகளும் அடங்கும். அத்துடன் 430 வழக்குகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், சில மீறல்கள் பொது வழக்குகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு எமிரேடிசேஷன் கொள்கைகளை மீறிய 20 நிறுவனங்களை அமைச்சகம் இந்தாண்டு ஜனவரியில் பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைத்தது. மேலும், 296 எமிராட்டியர்களை ஏமாற்றியதற்காக தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் மேலாளரை சிறையில் அடைக்கவும் பொது வழக்குரைஞர் உத்தரவிட்டார். அவர்கள் நஃபிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக பயிற்சி பெற்ற எமிராட்டியர்களிடமிருந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் பெடரல் சட்டம் தனியார் துறை நிறுவனங்களுக்கு அங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் கட்டாயமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் எமிராட்டியர்கள் பணிபுரிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதன்படி, கடந்த ஆண்டின் இறுதியில், 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் 2 சதவீத எமிரேட்டிகளை திறமையான பணிகளில் பணியமர்த்த வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது.

Related Articles

Back to top button
error: Content is protected !!