ADVERTISEMENT

உலகளவில் சிரமமற்ற போக்குவரத்து வசதி கொண்ட நகரங்களில் துபாய்க்கு எத்தனையாவது இடம்.? பட்டியலை வெளியிட்ட TomTom..!!

Published: 27 Aug 2023, 8:40 PM |
Updated: 27 Aug 2023, 9:17 PM |
Posted By: jesmi

உலகளவில் நெரிசல் மற்றும் போக்குவரத்தை கண்காணிக்கும் TomTom இன் 2022 போக்குவரத்து குறியீட்டு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலகளவில் உள்ள சிறந்த நகரங்களை விட துபாயில் போக்குவரத்து வசதியானது சிறந்து விளங்குவதாக கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

அதாவது உலகளவில் இருக்கக்கூடிய முக்கிய நகரங்களில் குறிப்பிட்ட தொலைவைக் கடக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கணக்கில் கொண்டு இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறியீடு 56 நாடுகளில் உள்ள 390 நகரங்களை பகுப்பாய்வு செய்தும், 543 பில்லியன் கிலோமீட்டர் சாலை நெட்வொர்க்குகளை உள்ளடக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலகின் 50 சிறந்த நகரங்களில் துபாய் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் லாஸ் ஏஞ்சல்ஸ், மாண்ட்ரீல், சிட்னி, பெர்லின், ரோம் மற்றும் மிலன் போன்ற முக்கிய உலகளாவிய நகரங்களைப் போலவே, துபாய் அதன் சென்ட்ரல் வணிக மாவட்டத்தில் அதாவது அதிகளவில் வணிக மற்றும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் நகரின் முக்கியமான பகுதியில் (central business district -CBD) 10 கிமீ தூரம் பயணிக்கத் தேவையான சராசரி நேரத்தின் அடிப்படையில் சிறந்து விளங்குவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

TomTom இன் 2022 போக்குவரத்து குறியீட்டு அறிக்கையின்படி, துபாயின் CBD இல் 10கிமீக்கு பயண நேரம் 12 நிமிடங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவீட்டில், நெதர்லாந்தில் உள்ள அல்மேர் என்ற நகரம், 10 கிமீக்கு 8 நிமிடங்கள் என்ற பயண நேரத்துடன் பட்டியலில் சிறப்பாகச் செயல்படும் நகரமாக உள்ளது. ஆனால், அதுவே லண்டனை ஒப்பிட்டால் 10 கிமீ தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் தேவைப்படுவதால், குறைந்த போக்குவரத்து ஓட்டம் கொண்ட நகரமாக விளங்குகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் துபாய் அதன் நகர்ப்புறங்களில் 10 கிமீக்கு 9 நிமிடங்கள் என்ற போக்குவரத்து செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. அதாவது, சராசரியாக மணிக்கு 59 கிமீ வேகத்தில் போக்குவரத்து இயங்கும் போது இந்த அறிக்கை கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், அமெரிக்காவில் உள்ள கிரீன்ஸ்போரோ நகரத்தில் சராசரியாக மணிக்கு 74 கி.மீ வேகத்திற்கு 10 கி.மீ.க்கு 7 நிமிடங்கள் 40 வினாடிகள் என போக்குவரத்து செயல்திறன் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், கொலம்பியாவின் பொகோடா நகரத்தில் 10 கிமீ தூரத்தை கடக்க 24 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இது மணிக்கு 19 கிமீ என்ற வேகத்துடன் குறைந்த செயல்திறன் கொண்ட நகரமாக உள்ளது. இந்த குறியீட்டில் உலகின் 50 சிறந்த நகரங்களில் துபாய் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) தலைவர் மட்டர் அல் டேயர் அவர்கள், துபாயின் நகர்ப்புறங்களில் போக்குவரத்து உள்கட்டமைப்பு பல ஆண்டுகளாக எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை விவரித்துள்ளார்.

 

அவர் கூறுகையில், 2006 இல் 8,715 லேன்-கிலோமீட்டரிலிருந்து 2022 இல் 18,475 வரை சாலை நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்குப் பல சாலைத் திட்டங்களை RTA மேற்கொண்டுள்ளதாகவும், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் எண்ணிக்கை 2006 இல் 129இலிருந்து 2022 இல் 884 ஆக 8 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே காலகட்டத்தில் நடை பாலங்கள் மற்றும் அண்டர்பாஸ்களின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்ந்துள்ளதாகவும் மற்றும் சைக்கிள் ஓட்டும் தடங்களின் நீளம் 2006 இல் 9 கிலோமீட்டரிலிருந்து 2022 இல் 543 கிலோமீட்டராக அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, RTA ஆல் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மூலம், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக உலகளவில் சாலைகளின் தரத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

இப்போது, RTAவின் முழு ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து நெட்வொர்க், துபாயைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் போக்குவரத்திற்கு முதுகெலும்பாக மாறியுள்ளது. அதேவேளை, டாக்ஸியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 2006 இல் 163 மில்லியனிலிருந்து, 2022 இல் 621.4 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று அல் டேயர் கூறியுள்ளார்.

துபாயின் பொதுப்போக்குவரத்து, மக்கள் எப்போதும் தனியார் வாகனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.