அமீரக செய்திகள்

UAE: அடுத்தடுத்து பிடிபடும் வாகன ஓட்டிகள்..!! ஒற்றை சக்கரத்தில் ஸ்டன்ட் செய்த பைக்கருக்கு 50,000 திர்ஹம் அபராதம்… வாகனம் பறிமுதல்..!!

துபாயில் உள்ள ஒரு பிரதான சாலையில் அபாயகரமாகச் சென்ற பைக் ஓட்டுநரை துபாய் காவல்துறை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நபருக்கு 50,000 திர்ஹம் அபராதமும் 23 பிளாக் பாயின்ட்களும் விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பைக்கர் அவரது கேமராவில் பதிவு செய்துள்ள வீடியோவில், சாலையில் அதிவேகத்துடன் ஆபத்தான முறையில் சூப்பர்பைக்கில் ஸ்டண்ட் செய்வதைக் காணலாம். அவர் வெளியிட்ட வீடியோ, சில மணி நேரங்களிலேயே சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இதனையடுத்து, போக்குவரத்து ரோந்து அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். பின்னர், துபாய் போலீஸ் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கில் அந்த வீடியோ கிளிப்பை வெளியிட்டு, அந்த ஓட்டுநரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்ததை அறிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநர் மேஜர்-ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் அவர்கள் கூறுகையில், வீடியோ கிளிப்பில் ரைடர் தனது பைக்கை வாகனங்களுக்கு இடையில் மற்றும் ஒரு சக்கரத்தில் அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்று, தனது பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் மற்ற சாலைப் பயணிகளின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தாண்டில் இதுவரை துபாய் எமிரேட்டில் 22,115 பைக் ஓட்டுநர்களுக்கு அபராதங்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 858 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

துபாயின் திருத்தப்பட்ட போக்குவரத்துச் சட்டத்தின் படி, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுவது அல்லது உயிர்கள் அல்லது உடைமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது போன்ற நடத்தைகளுக்கு அதிகபட்சமாக அபராதம் 50,000 திர்ஹம்கள் விதிக்கப்பட வேண்டும். அதுபோல, சாலைகளில் பந்தயத்தில் ஈடுபடுவதற்கு 100,000 திர்ஹம் என்ற கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏற்கனவே, வியாழக்கிழமையன்று பரபரப்பான ஷேக் முகமது பின் சயீத் சாலையில் மற்றொரு வாகனத்தை ஆபத்தான முறையில் முந்திச் சென்ற வாகன ஓட்டியை கைது செய்து 50,000 திர்ஹம் அபராதம் விதித்துள்ளதாக ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!