அமீரக செய்திகள்

இந்தியாவிலிருந்து திரும்பும்போது அரிசியை கொண்டு வரும் அமீரக குடியிருப்பாளர்கள்..!! இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடைக்கான எதிரொலி…!!

இந்திய அரசாங்கம் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 20ஆம் தேதி தடை அறிவித்துள்ள நிலையில், பல அமீரக குடியிருப்பாளர்கள் கோடை விடுமுறை முடிந்து இந்தியாவில் இருந்து திரும்பும் போது தங்களுக்குப் பிடித்த அரிசி வகைகளைக் கொண்டு வருகின்றனர்.

பொதுவாகவே சொந்த ஊரில் இருந்து வெளிநாடு திரும்பி செல்லும் போது அரிசி, மசாலா, வெங்காயம் போன்ற பொருட்களை எடுத்து வருவதை ஒரு சிலர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்திய அரசு வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதியை தடை செய்துள்ளதால் இந்த சூழ்நிலையானது அமீரகம் மட்டுமல்லாது பொதுவாகவே வெளிநாடு செல்லும் குடும்பத்தினருக்கு அரிசியையும் தங்களது லக்கேஜில் கொண்டு செல்வதற்கான எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.

இது போன்ற எண்ணமுடைய இந்தியாவைச் சேர்ந்த ஷப்னா என்பவர் எப்போது இந்தியா சென்றாலும், அங்கிருந்து அரிசி கொண்டு வருவதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார். இந்தாண்டும் அவர் 5 கிலோ அரிசியை வழக்கம் போல், தாய் நாட்டிலிருந்து கொண்டு வந்துள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, ஒவ்வொரு வருடமும், அவரது சொந்த ஊரில் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட வகை அரிசியை அமீரகத்திற்கு கொண்டு வருவதாகவும், இங்கு அவருக்கு நிறைய குடும்பம் மற்றும் நண்பர்கள் இருப்பதால், அரிசி நுகர்வு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் ஷப்னா தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில் ஐந்து அல்லது ஆறு கிலோ வெள்ளை அரிசி கிடைக்கும் என்று கூறிய ஷப்னா, இவ்வாறு அரிசியை கொண்டு வருவது அவரது குடும்பத்திற்கு 3 திர்ஹம் வரை மிச்சப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசுகையில், இது அவ்வளவு பெரிய சேமிப்பு இல்லையென்றாலும், இந்தியாவுக்குச் செல்லும்போது லக்கேஜில் இடமிருந்தால், அரிசியைக் கொண்டு வருவதையே எப்போதும் தேர்வு அவர் செய்வதாக கூறியுள்ளார்.

இவரைப் போலவே, மற்றொரு இந்தியரான சுரேஷ் என்பவரும் இந்தியாவில் இருந்து அரிசியை கொண்டு வந்திருக்கிறார். இது குறித்து அவர் மனம் திறக்கையில், அவரது சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடையில் விற்கப்படும் இந்த அரிசி பிடித்துள்ளதாகவும், அதனால் சிறிதளவு இங்கே கொண்டு வர முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உலக அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது மற்றும் இந்தியாவில் விளையும் அரிசியை 140 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்புகிறது. இந்நிலையில் அரிசி ஏற்றுமதி மீதான இந்தியாவின் தடை, அமீரகத்தில் உள்ள சில்லறை விற்பனையாளர்களை, பொருட்களின் ஆரம்ப விலையில் 40 சதவீத உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த உள்ளூர் பல்பொருள் அங்காடிகளின் கூற்றுப்படி, இது ஒரு தற்காலிக பிரச்சினையாகும், இது புதிய சப்ளையர்கள் சந்தையில் நுழைந்தவுடன் விரைவில் தீர்க்கப்படும். மேலும், வியட்நாம், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதால், அமீரக சந்தையில் பாஸ்மதி அல்லாத அரிசி சப்ளையின் மீதான பிரச்சனை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களைப் போன்றே பலரும் தற்பொழுது அரிசியை தங்களின் லக்கேஜ்களில் கொண்டு வருகின்றனர். அரிசி பிரச்சனை ஒரு புறமிருக்க இந்தியாவில் அதிகரித்துள்ள தக்காளி விலையினால் அமீரகத்தில் இருந்து இந்தியா செல்கையில் ஒரு சிலர் தக்காளியையும் கிலோ கணக்கில் வாங்கிக் கொண்டு செல்வதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!