அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று இடி, ஆலங்கட்டி மழையுடன் சுழன்று அடித்த சூறாவளி..!! சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்….!!

ஒரு சிறியளவிலான டொர்னடோ என்றழைக்கப்படும் சூறாவளியானது இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29) அமீரகத்தைத் தாக்கியதாக தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் ஃபுஜைராவில் உள்ள சிஜி நகரத்தை இந்த டொர்னடோ தாக்கியதாக கூறி இது குறித்த வீடியோவினை அமீரகத்தின் புயல் மையம் (Storm Center) அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இது தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களின் படி, சுமார் 12-15 மீட்டர் விட்டம் கொண்ட சிறிய சூறாவளி மதியம் 2 மணியளவில் இப்பகுதியில் சுழன்று அடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு இடி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் சூறாவளி நீடித்ததாகக் கூறப்படுகிறது.

அமீரகத்தின் புயல் மையம் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெரிய சாம்பல் நிற தூசு நிறைந்த காற்று கீழிருந்து உயர்ந்து, வானத்தை மூடுவதை காணலாம்.

பொதுவாக சூறாவளி என்பது இடியுடன் கூடிய மழையில், தரையிலிருந்து மேலே நீண்டு சுழன்று கொண்டே செல்லும் காற்றின் நெடுவரிசை ஆகும். அதாவது சூடான, ஈரப்பதமான காற்று குளிர்ந்த, வறண்ட காற்றுடன் மோதும்போது சூறாவளி உருவாவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிகழ்வு பெரும்பாலும் மதிய நேரங்களிலேயே நிகழும் என கூறப்படுகிறது. இது கொளுத்தும் வெயில் தரையையும் வளிமண்டலத்தையும் சூடாக்கி இடியுடன் கூடிய மழையை உருவாக்கும்.

குறிப்பாக, ‘dust devils’ என்றழைக்கப்படும் இந்த மணல் சூறாவளி, ஐக்கிய அரபு அமீரகத்தில் பாதிப்பில்லாதது மற்றும் சாதரணமான நிகழ்வு என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 2022இல் இது போன்றதொரு சூறாவளி அல் அய்னை தாக்கியுள்ளது. கூடவே, பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியுள்ளது. அதே செப்டம்பரில், ஷார்ஜாவிலும் ஒரு சிறிய சூறாவளி உருவாகியது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!