ADVERTISEMENT

அமீரகத்தின் மூன்று எமிரேட்களில் நேற்று பலத்த மழை!! இன்றும் மழை பெய்யக்கூடும்.. முன்னெச்சரிக்கை வெளியிட்ட NCM..!!

Published: 20 Aug 2023, 9:56 AM |
Updated: 20 Aug 2023, 10:29 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று சனிக்கிழமையும் பிற்பகலில் அமீரகத்தின் மூன்று எமிரேட்களில் பலத்த மழை பெய்துள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அபுதாபி, ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய எமிரேட்களில் நேற்று மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, அபுதாபியின் அல் அய்னில் கனமழை பெய்துள்ளது. இதனால், அங்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, குடியிருப்பாளர்கள் மோசமான வானிலையை விட்டும் பாதுகாப்பாக இருக்கவும் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு இணங்கவும் NCM அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை பெய்த மழையின் வீடியோ ஒன்றினை NCM தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அல் அய்னின் உம் கஃபா பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு மத்தியில், சாலைகளில் வாகனங்கள் செல்வதைக் காணலாம்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, நேற்று பெய்த கனமழையால், ஷார்ஜாவின் பிரபலமான சுற்றுலா தலமான வாடி அல் ஹெலோ பள்ளத்தாக்கில் நீரோடைகளால் நீர் நிரம்பியுள்ளது. அத்துடன் ஃபுஜைராவில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. ஷேக் கலீஃபா தெருவில் விழுந்த பனிக்கட்டிகளை குடியிருப்பாளர்கள் கையில் எடுக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சனிக்கிழமையன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் பொதுமக்களை தேசிய வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

ADVERTISEMENT

மேலும் NCMஇன் முன்னறிவிப்பின் படி, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை நீடிக்கும் என்பதும், இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20), வெப்பச்சலன மேகங்கள் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மழையை உருவாக்கக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.