அமீரக செய்திகள்

UAE: முடிவுக்கு வரவுள்ள கோடைகால வெப்பம்..!! வானத்தில் காட்சியளிக்கவுள்ள சுஹைல் நட்சத்திரம்..!! வானியலாளர்கள் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்றளவும் நீடித்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், கோடை வெப்பத்தின் முடிவைக் குறிக்கும் சுஹைல் நட்சத்திரம் வரவிருக்கும் ஆகஸ்ட் 24 அன்று (நாளை) வானில் காட்சியளிக்க உள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி அன்று பகல்நேரம் 13 மணி நேரத்திற்கும் குறைவாக இருந்துள்ளது, இது அடுத்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் (Emirates Astronomical Society) தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொளுத்தும் கோடை முடிவுக்கு வரும் நிலையில், குளிர்காலம் மெதுவாக அடியெடுத்து வைக்கும் என கூறப்படுகின்றது. எனவே, இன்று தொடங்கி ஏப்ரல் 21 வரை பகல் நேரம் 13 மணிநேரத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும், மேலும் அக்டோபர் 2 முதல் ஏப்ரல் 11 வரை 11 மணிநேரத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வானில் தோன்றும் சுஹைல் நட்சத்திரம், நாட்டில் கோடை காலம் முடிந்து குளிர்ச்சியான சூழல் தொடங்குவதைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், குடியிருப்பாளர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த வானியல் நிகழ்வானது ஆகஸ்ட் 24 அன்று ஏற்படும் என்றும் அரேபிய தீபகற்பத்தின் மையத்தில் இந்த நட்சத்திரம் காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும், இந்த நட்சத்திரம் தோன்றி சுமார் 45 நாட்களுக்குப் பிறகு, வெப்பநிலை படிப்படியாக சரிந்து அக்டோபர் 2 ஆம் தேதி இரவும் பகலும் சமமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சுஹைல் நட்சத்திரம் பயிர்களை வளர்ப்பதற்கான சரியான சூழ்நிலையையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலின் போது, விவசாயிகள் வளமான அறுவடைக்கு அடித்தளமாக விதைகளை விதைப்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து ஆரம்ப சாகுபடியைத் தொடங்கி, செப்டம்பர் இரண்டாம் பாதியில், நாற்றுகள் நடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!