அமீரக செய்திகள்

UAE: கனமழையால் சாலையில் விழுந்த மரங்கள்..!! எதிர்வரும் நாட்களில் இதேபோன்ற வானிலையை எதிர்பார்க்கலாம் என NCM அறிவிப்பு…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரின் வடக்கே இருக்கும் அல் ஹயரில் இன்று பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்களை அப்புறப்படுத்தி, அசௌகரியங்களை குறைக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது. அல் ஹேயரில் விழுந்த மரங்கள் திடீர் மற்றும் அபாயகரமான வானிலை மாற்றங்களை நினைவூட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய வானிலை இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கணித்திருந்த நிலையில், பிற்பகலில் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி மழை பெய்யக்கூடிய வெப்பச்சலன மேகங்கள் உருவாகும் என்றும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் NCMஇன் துல்லியமான அறிவிப்பின் படி, கனமழை பெய்ததுடன், குறிப்பாக அல் ஹேயரில் எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. மேலும், அல் ஃபோஹ், அல் பிதா மற்றும் அல் சரூஜ் உட்பட அல் அய்னின் பிற பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, வரவிருக்கும் நாட்களில் அமீரகம் இதேபோன்ற வானிலையை எதிர்பார்க்கலாம் என்று NCM இன் முன்னறிவிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு:

தற்போது, NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, எமிரேட்டில் சனி முதல் செவ்வாய் வரை வானிலை ஓரளவு மேகமூட்டத்துடனும், காலையில் கிழக்கு கடற்கரையில் குறைந்த மேகங்கள் மற்றும் பிற்பகல் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி வெப்பச்சலன மேகங்களும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவில் ஈரப்பதமான வானிலையும், காலையில் சில கடலோரப் பகுதிகளில் மூடுபனியையும் பார்க்கலாம். அத்துடன் தென்கிழக்கு முதல் வடகிழக்கு வரை லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும், இது சில சமயங்களில் பகல் நேரத்தில் தூசியுடன் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் 10 முதல் 25 வரையிலும், சில நேரங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடிய பகுதிகளில் குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகக் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து வானிலையை கண்காணித்து வருவதோடு, கணிக்க முடியாத வானிலையின் விளைவாக எழக்கூடிய ஏதேனும் அவசரநிலைகள் அல்லது இடையூறுகளுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!