ADVERTISEMENT

UAE: தொழிலாளர்களுக்கு மதிய நேர இடைவேளையை வழங்காத 50 நிறுவனங்கள்..!! விதிகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை..!!

Published: 17 Aug 2023, 6:03 PM |
Updated: 17 Aug 2023, 6:16 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE), முதலாளிகள் கோடைகாலங்களில் வெளிப்புறத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடைவேளை கட்டாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால், இதுவரை இந்த சட்டப்பூர்வ விதியை பின்பற்றாத 50 நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அமீரகத்தில் கோடைகாலங்களில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும் அபாயம் உள்ள நிலையில், இது வெளிப்புறத் தொழிலாளர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அமைச்சகம் மதிய நேர இடைவேளையை அமல்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஜூன் 15 முதல் ஜூலை இறுதிவரை கள ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள், இந்த விதியை முறையாகப் பின்பற்றாத சுமார் 47 நிறுவனங்களைக் கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பெரும்பாலான முதலாளிகள் தொழிலாளிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு சட்டத்திற்கு இணங்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான கோடைகாலங்களில் வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுப்பது மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முதன்முதலாக, 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மதிய இடைவேளை திட்டம், இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விதிகளை மீறும் நிறுவனங்கள் பிடிபட்டால், ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் வீதம் அதிகபட்சமாக 50,000 திர்ஹம்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு அமீரகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 55,192 ஆய்வுப் பயணங்களில் 99 சதவீத நிறுவனங்கள் சட்ட விதிகளுக்குட்பட்டு தொழிலாளர்களுக்கான உரிமையை வழங்கியுள்ளன. இந்த விகித இணக்கங்களைக் கண்ட அமைச்சகம், “கடந்த ஆண்டுகளில், உறுதிப்பாட்டின் ஈர்க்கக்கூடிய இணக்க விகிதங்களைக் கண்டோம்” என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்தாண்டின் முதல் ஆறுமாதங்களில் நிறுவனங்களுக்கு 17,000 விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், ஒர்க் ஷாப் மற்றும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் தங்கும் முகாம்களுக்கு பிரசுரங்களை விநியோகித்தது.

MOHRE வழங்கியுள்ள ஆலோசனைகளின் படி, முதலாளிகள் அவர்களது பணியாளர்கள் ஓய்வு நேரத்தில் ஓய்வெடுக்க நிழலுள்ள இடத்தை வழங்க வேண்டும் மற்றும் தினசரி வேலை எட்டு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு ஊழியர் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தால், அது கூடுதல் நேரமாக கருதப்படும்.

இதற்கிடையில், அத்தகைய மதிய நேர இடைவேளை சாத்தியமில்லாத சில வேலைகள் உள்ளன. அந்த வேலைகளுக்கு விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. முக்கியமான பழுதுபார்ப்பு அல்லது நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் போது அதனை சரிசெய்யும் வேலைகளை புரியும் தொழிலாளர்கள் இதில் அடங்குவர்.

விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இதுபோன்ற அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, முதலாளிகள் போதுமான குளிர்ந்த குடிநீர், அங்கீகரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் முதலுதவி ஏற்பாடுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமீரகத்தின் மதிய நேர வேலைத் தடையில் ஏதேனும் விதிமீறல்களைக் கண்டால், 600 590 000 என்ற கால் சென்டர் நம்பர் மூலம் புகாரளிக்குமாறு அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மாற்றாக, அமைச்சகத்தின் மொபைல் ஃபோன் அப்ளிகேஷனிலும் மீறல்கள் குறித்து புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.