ADVERTISEMENT

அமீரகத்தில் இந்தாண்டின் அதிக வெப்பமான நாள் பதிவு..!! 50.8°C ஆக பதிவான வெப்பநிலை..!!

Published: 28 Aug 2023, 5:44 PM |
Updated: 28 Aug 2023, 5:56 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பரவலாக கோடை மழை பெய்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வெயில் அரை சதம் அடித்துள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின்படி (NCM), கடந்த சனிக்கிழமை பிற்பகல் அல் தஃப்ரா பகுதியில் உள்ள Owtaid இடத்தில் வெப்பநிலையானது 50.8°C ஆக உயர்ந்து, இந்த ஆண்டின் அதிக வெப்பமான நாளாகப் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேநாளில், தெற்கு மெசைரா (southern Mezaira) நகரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 49.8 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. மேலும் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் குறைந்தது மூன்று நகரங்கள் 49.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், நாட்டின் சில பகுதிகளில் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், புதன் கிழமை வரை இந்த ஈரப்பதமான சூழல் தொடரும் என்றும் NCM தெரிவித்துள்ளது. அத்துடன் கரையோர மற்றும் உள் பிரதேசங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஜூலை மாதம் உலகம் முழுவதும் உச்சத்தை எட்டிய கோடை வெப்பத்திற்கு ஏற்ப அமீரகத்தின் வெப்பநிலை 50.1 ° C க்கும் அதிகமாக உயர்ந்து, இந்தாண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியிருந்தது. அதேவேளை, ஈரப்பதத்தின் (humidity) அளவு கடந்த மாதம் 100 சதவீதத்தை எட்டியிருந்தது. அப்போது, குடியிருப்பாளர்கள் அனைவரும் அடிக்கடி தண்ணீர் மற்றும் நீர் ஆகாரம் அருந்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கைகளை வெளியிட்டனர்.

அதுமட்டுமின்றி, இந்த கோடையில் துபாய் மற்றும் அபுதாபி போன்ற கடலோர நகரங்களில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருப்பதால், ஜூலை முழுவதும் புழுக்கமான வானிலை நீடித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஐரோப்பாவில் வெப்ப அலைகள் மற்றும் மத்திய கிழக்கில் ஈரப்பதத்தின் (humidity) அளவு அதிகரித்து வருவதற்கு புவி வெப்பமடைவதே காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT