ADVERTISEMENT

UAE: அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க புதிய சிஸ்டம் அறிமுகம்…!! நாடு தழுவிய சாலை பாதுகாப்பு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்!!

Published: 3 Aug 2023, 6:01 PM |
Updated: 3 Aug 2023, 6:19 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு (Energy and Infrastructure) அமைச்சர் சுஹைல் அல் அல் மஸ்ரூயி அவர்கள், அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளைக் கையாள்வது, வெள்ள அபாயங்களைக் குறைப்பது மற்றும் பள்ளியை பாதுகாப்பாக நடத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இத்திட்டம் அடிக்கடி விபத்துகள் நிகழும் பாதைகளில் எச்சரிக்கை அமைப்புகளைப் (interactive warning system) பயன்படுத்தும் என்றும் மேலும் பாதசாரிகள் கடக்க வேண்டிய பகுதிகளைக் குறிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தேசிய திட்டத்தின் (National Programme for Infrastructure Development) கீழ் அணைகள் மற்றும் பள்ளத்தாக்குகளினால், சாலைகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இது சலாமா 365 என்றும் அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அவரது கூற்றுப்படி, நாடு முழுவதும் 9 பள்ளத்தாக்குகள் மற்றும் 16 அணைகள் இந்த முன்னோடித் திட்டத்தில் இலக்கு வைக்கப்படும். எனவே, அனைத்து சூழலிலும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய மற்றும் உள்ளூர் அரசு மற்றும் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற அமைச்சகம் முனைப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல, இந்த முன்முயற்சியானது, ‘ஸ்மார்ட் ஸ்கூல் மாடல்’ மூலம் சாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஹசன் அல் மன்சூரி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய அல் மன்சூரி, அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக்கு வெற்றிகரமான முன்மாதிரியாக அமைவதற்கு அமைச்சகம் தொடர்ந்து முயற்சிக்கும் என்றும் அத்துடன் தனியார் துறையுடனான கூட்டு முயற்சிகளின் கீழ் வரும் சலாமா 365 என்ற திட்டம் அமீரகத்தின் உலகளாவிய தலைமையை வலுப்படுத்த நீண்ட தூரம் செல்லும் என்றும் கூறியுள்ளார்.

அமலுக்கு வந்த சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

அபுதாபி காவல்துறை கடந்த மே மாதம், மோசமான வானிலை மற்றும் போக்குவரத்து விபத்துக்கள் குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் சாலை எச்சரிக்கை அமைப்பை (road alert system) அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த அமைப்பில், சாலையில் நடந்த விபத்துகளை எச்சரிக்க நீலம் மற்றும் சிவப்பு நிற விளக்குகளும், மூடுபனி, மழை அல்லது தூசி புயல் போன்ற மோசமான வானிலை குறித்து எச்சரிக்க மஞ்சள் விளக்குகளும் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, இந்த அலெர்ட் சிஸ்டம் சோலார் எனர்ஜி மற்றும் இன்டெர்னல் பேட்டரிகளின் உதவியால் இயங்குகின்றன. இது இரவானாலும் சரி பகலானாலும் சரி 200 மீட்டர் தொலைவில் இருந்து தெரியும்.

அதே மே மாதத்தில், ஷேக் முகமது பின் ரஷீத் ரோட்டின் நான்கு வழிச்சாலையின் முதல் இரண்டு பாதைகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மற்றும் அபுதாபி மற்றும் துபாயை இணைக்கும் பாதையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கி.மீ என்ற புதிய விதிகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.

விபத்தில் இறப்புகள் குறைவு, காயங்கள் அதிகம்:

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஆண்டு அமீரகத்தில் நடந்த போக்குவரத்து விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும் ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2022 ஆம் ஆண்டில் 343 பேர் விபத்துக்களில் இறந்துள்ளனர், அதேசமயம், 5,045 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.