அமீரக செய்திகள்

அமீரகத்தில் இந்த ஆண்டு பதிவான 8 மோசமான சாலை விபத்துகளும் அதற்கான அபராதங்களும்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலைகளில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பல்வேறு கடும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. துபாயில் சமீபத்தில் திருத்தப்பட்ட போக்குவரத்துச் சட்டத்தின் படி, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதிகமான அபராதமாக 50,000 திர்ஹம் வரை விதிக்கப்படுகிறது.

மேலும், இந்த மாதத்தில் நடைபெற்ற இரண்டு விதிமீறல் சம்பவங்களில் 50,000 திர்ஹம் அபராதம் விதித்து, துபாய் காவல்துறை திருத்தப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தியும் உள்ளது. அதுபோல, அபுதாபியில் 2020 முதல் கடுமையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சாலைகளில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கொடூரமான விபத்துகளின் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு 2018ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான   வீடியோக்களை அதிகாரிகள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டில் இதுவரை பதிவான கடுமையான போக்குவரத்து விபத்து வீடியோக்களை வெளியிட்டதற்கு கிட்டத்தட்ட 93 சதவீதம் பேர், அதிகாரிகள் பகிர்ந்துள்ள விபத்துகளின் வீடியோக்கள், சாலைகளில் பாதுகாப்பாக ஓட்டுவதற்கு உதவுவதாக பதிலளித்துள்ளனர்.

எனவே, அமீரகத்தில் இந்தாண்டு இதுவரை வெளியான சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்:

1. ரெட் சிக்னலைத் தவிர்க்க வேகமாக செல்லுதல்:

இந்தாண்டு பிப்ரவரியில் வெளியான வீடியோவில், சாலையில் கிரீன் சிக்னலைப் பிடிக்க வாகன ஓட்டிகள் அவசரமாக செல்லும் போது ஏற்படும் விபத்துகளைக் காணலாம். சிக்னல் மஞ்சள் நிறத்திற்கு மாறினாலும், இன்டர்செக்சனில் பொறுமையின்றி வேகமாகச் செல்கிறார்கள்.

அமீரக போக்குவரத்து சட்டத்தின்படி, சிக்னலை மதிக்காமல் கடந்து சென்றால், 1,000 திர்ஹம் அபராதம், 12 பிளாக் பாயிண்ட்கள் மற்றும் 30 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும். அதேசமயம், அபுதாபி மற்றும் துபாயில், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை விடுவிக்க 50,000 திர்ஹம் செலுத்த வேண்டும்.

2. சாலைகளில் கவனத்தைச் சிதறடித்து வாகனம் ஓட்டுதல்:

காவல்துறையினர் வெளியிட்டுள்ள வீடியோவில், சாலையில் சிவப்பு நிற சிக்னல் போட்ட பிறகும், கவனம் சிதறிய ஓட்டுநர், நிற்காமல் போக்குவரத்து இன்டர்செக்‌ஷனில் நுழைவதைக் காணலாம். அதனையடுத்து, எந்தவித விதிகளையும் மீறாமல் கடந்து சென்ற 4WD கார் மீது மோதுகிறார். இதனால், இரு வாகனங்களும் கட்டுப்பாட்டை மீறிச் சுழல்கின்றன.

அபராதம்: சிவப்பு சிக்னலைத் தாண்டியது மற்றும் மொபைலில் பேசிக் கொண்டே கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டியதற்காக 800 திர்ஹம் அபராதமும் நான்கு பாயின்ட்களும் விதிக்கப்படும்.

3. கடைசி நிமிடத்தில் எக்ஸிட் பாதைக்கு செல்லுதல்:

கடந்த ஏப்ரல் மாதத்தில், நெடுஞ்சாலையில் சாலையின் ஒரு ஓரத்தில் இருந்து நான்கு லேன்களைக் (lane) கடந்து கடைசி நிமிடத்தில் திடீரென எக்ஸிட் பாதையில் வெளியேற முயற்சித்து வாகனம் கவிழ்ந்து விழுவதைக் காட்டும் வீடியோவை அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது.

அபராதம்:  திடீரென பாதை மாறி செல்லும் ஓட்டுநருக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும். அதேசமயம், இந்த வழக்கில் சாலையில் தவறான முறையில் முந்தியதற்காக 600 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயிண்ட்களையும் காவல்துறை விதிக்கலாம்.

4. இரண்டு பெரிய போக்குவரத்து மீறல்களைச் செய்து பிடிபட்ட டிரைவர்

கடந்த ஏப்ரல் 25 அன்று, இரண்டு பெரிய போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்டு சக வாகன ஓட்டிகளை ஆபத்தில் ஆழ்த்திய ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. அதிகாரிகள் பகிர்ந்துள்ள வீடியோவில், வாகன ஓட்டி வாகனத்தை முன்னால் நிறுத்துவதும், பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்து முந்திச் செல்வதும் பதிவாகியுள்ளன.

அபராதம்: இவ்வாறு டெயில்கேட்டிங் செய்பவர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு பிளாக் பாயிண்டுகள் விதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்து முந்திச் செல்வது 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயின்ட்களுக்கு வழிவகுக்கும்.

5. நடுரோட்டில் திடீரென நிறுத்துவது:

கடந்த ஜூலை மாதம், சாலையில் சென்று கொண்டிருந்த பிக்அப் டிரக் வாகனத்தில் இருந்து ஏதோ பறந்து சென்றதற்குப் பிறகு, சாலையின் நடுவில் திடீரென நிறுத்தப்படுகிறது, இதனையடுத்து பின்னால் வந்த மற்ற இரண்டு கார்களும் நிற்கின்றன. ஆனால் நான்காவதாக வந்த கார் சரியான நேரத்தில் நிறுத்த முடியாமல் முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

அபராதம்: சாலையின் நடுவில் நிறுத்தினால் 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஆறு பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும்

6. தகுதியற்ற டயர்களினால் ஏற்படும் விபத்து:

சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென காரின் டயர் வெடித்து சிதறியது. அதனையடுத்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழக்கும் வீடியோ கடந்த மாதம் வெளியானது.

அபராதம்: சாலைக்கு தகுதியற்ற டயர்களுடன் வாகனம் ஓட்டினால், 500 திர்ஹம் அபராதம், நான்கு பிளாக் பாயிண்ட்கள் மற்றும் ஒரு வார காலத்திற்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

7. பைக்கில் சாகசம் செய்வது:

அண்மையில், துபாயின் பிரதான சாலையில் ஒரு பைக்கர், ஒற்றை சக்கரத்திலேயே ஸ்டண்ட் செய்யும் வீடியோ வைரலானது. இதனைப் பார்த்த துபாய் காவல்துறையினர் அந்த இளைஞரை உடனடியாக கைது செய்தனர்.

அபராதம்: பைக் ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தில் 23 ப்ளாக் பாய்ண்ட்ஸ், 50,000 திர்ஹம் அபராதம் விதித்தது காவல்துறை.

 

8. டெயில்கேட் செய்தவரைக் கைது செய்து 50,000 அபராதம் விதித்த அதிகாரிகள்:

கடந்த வாரம் வெளியான வீடியோவில், ஒரு வாகன ஓட்டி வலப்புறத்திலிருந்து மற்றொரு வாகனத்தை உரசியவாறே முந்திச் செல்வதைக் காணலாம். மேலும், முந்திய பின்னரும் பல முறை பிரேக் பிடித்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதைக் காணலாம்.

அபராதம்: கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக துபாய் காவல்துறை வாகன ஓட்டிக்கு 50,000 திர்ஹம் அபராதம் விதித்தது. அவர் உரிமத்தில் 23 கருப்பு புள்ளிகள் பெற்றுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!