ADVERTISEMENT

விசா மாற்றத்திற்காக துபாய்-ஓமான் செல்லும் பேருந்து சேவைக்கு பயணிகளிடையே போட்டாபோட்டி..!! டிக்கெட்டுகளை வாங்க அலைமோதும் பயணிகள்….!!

Published: 22 Aug 2023, 6:12 PM |
Updated: 22 Aug 2023, 6:26 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் விசிட் அல்லது சுற்றுலா விசாவில் வருபவர்கள் தங்களின் விசாவை நீட்டித்து தொடர்ந்து அமீரகத்தில் தங்குவதற்கு அமீரகத்தை விட்டு வெளியே சென்று திரும்ப வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதற்காக அமீரகத்திற்கு அருகில் உள்ள நாடான ஓமானிற்கே பெரும்பாலான நபர்கள் சென்று மீண்டும் அமீரகத்திற்கு திரும்பி வருகின்றனர்.

ADVERTISEMENT

அமீரகத்தில் இருந்து ஓமான் செல்ல விமான டிக்கெட்டானது அதிகம் என்பதால் பெரும்பாலானோர் துபாயில் இருந்து மஸ்கட் செல்லும் பேருந்து சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். தற்பொழுது அதிகளவு நபர்கள் விசாவை நீட்டிக்க இந்த பேருந்து சேவையையே பயன்படுத்துவதால் இந்த குறிப்பிட்ட பேருந்து சேவைகளுக்கு அதிகளவில் டிமாண்ட் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான பயணிகள் ஓமனுக்கு மிகவும் மலிவான செலவில் பேருந்தில் பயணம் செய்வதால், அமீரகத்தில் விசிட் விசாக்களை மாற்றுவதற்கான சேவையானது அதிக தேவையை அனுபவித்து வருவதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், இன்று டிக்கெட் வாங்க சென்றால் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் டிக்கெட் கிடைக்கும் என்றும் பயணிகள் கூறுகிறார்கள். எனவே, விசா மாற்றத்திற்காக பேருந்து சேவையைப் பெற விரும்புவோர், உத்தேசித்துள்ள பயணத் தேதிக்கு குறைந்தது 9 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது குறித்து பயண முகவர்கள் விவரிக்கையில், பயணிகளில் பெரும்பாலோர் ஓமானுக்கு பேருந்தில் பயணம் செய்ய விரும்புவதாகவும், விமான பயணத்தை ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் பேருந்து சேவை மலிவானதாக இருப்பதே காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

துபாயில் இருந்து மஸ்கட்டிற்கு சாலை வழியாக பேருந்து சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் தேராவில் உள்ள டானாடாவிற்கு அருகிலுள்ள அல் கஞ்சரி டிரான்ஸ்போர்ட் (Al Khanjari Transport) மட்டுமே. இது தினமும் துபாய் மற்றும் மஸ்கட் இடையே மூன்று பேருந்துகளை இயக்குகிறது.

நேரம் மற்றும் செலவு:

இந்த பேருந்தில் பயணிக்க ஒரு டிக்கெட்டிற்கு 100 திர்ஹம்ஸை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. மேலும், காலை 9, பிற்பகல் 3 மற்றும் இரவு 9 மணிக்கு என 3 பேருந்து சேவைகளை இந்நிறுவனம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

அல் கஞ்சரி டிரான்ஸ்போர்ட் அளித்துள்ள தகவலின் படி, மஸ்கட் செல்லும் அடுத்த பேருந்துக்கான டிக்கெட் ஆகஸ்ட் 29 அன்று இரவு பேருந்தில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 28 வரை பேருந்துகள் முழுவதுமாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், அல் கஞ்சாரி டிரான்ஸ்போர்ட்டில் டிக்கெட்டுக்காக ஏராளமான பயணிகள் வரிசையில் நிற்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு விருப்பமான பயணத் தேதிக்கான டிக்கெட்டைப் பெற முடியாமல் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

பயணிகளின் குமுறல்:

அமீரகத்தில் விசா மாற்றத்திற்காக இதே போலொரு சூழ்நிலையை சந்தித்து வரும் அப்துல் ஹமீத் என்பவர், அவரது விசா ஆகஸ்ட் 27 அன்று காலாவதியாகும் என்பதால் விசா மாற்றத்திற்காக இந்த மாதம் 26 ஆம் தேதி ஒரு டிக்கெட்டை வாங்க திட்டமிட்டுள்ளார். அவரது வேலைக்கான இரண்டாவது சுற்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கு விசாவை நீட்டிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். ஆனால், இப்போது அவர் விரும்பிய தேதியில் பேருந்து டிக்கெட் கிடைக்காததால், வேறு வழியின்றி, விமானத்தில் பயணித்து தனது விசாவை மாற்றத் தேர்வு செய்துள்ளார்.

இது குறித்து அவர் பேசிய போது, “நான் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டுள்ளதால் 500 திர்ஹம் கூடுதலாகச் செலவழிக்க வேண்டும், மேலும் பயணத்தின் மொத்த கால அளவு பேருந்து பயணத்தைப் போலவே இருக்கும்” என்று அவரது ஏமாற்றத்தையும் ஆதங்கத்தையும் பகிர்ந்துள்ளார். இவரைப் போலவே, ஓமானில் இருந்து அமீரகத்திற்கு வர நினைப்பவர்களுக்கும்  பேருந்து டிக்கெட் கிடைப்பதற்கு அதிகளவு சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.