அமீரக செய்திகள்

துபாய்: புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ள தேரா க்ளாக் டவர்..!! 10 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றதாக தகவல்..!!

துபாயின் ஐகானிக் அடையாளமான தேரா க்ளாக் டவர், சுமார் 10 மில்லியன் திர்ஹம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பிறகு தற்பொழுது மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது. 1960களில் முதன் முதலில் திறக்கப்பட்ட இந்த க்ளாக் டவர் ரவுண்டானா, அப்போது முதல் இப்போது வரை நகரின் முக்கிய வரலாற்று அடையாளமாக விளங்கி வருகின்றது. இதனை முன்னிட்டு, துபாய் முனிசிபாலிட்டி அதனை மறுசீரமைத்து நவீன வடிவமைப்புகளுடன் மெருகேற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை கடந்த மே 2023 இல் தொடங்கியது.

துபாயின் அழகியல் தோற்றத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், துபாய் முனிசிபாலிட்டி இப்போது இந்த திட்டத்தை நிறைவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், நகரின் மையத்தில் அமைந்துள்ள க்ளாக் டவரானது அற்புதமான ஃபவுண்டைன், இனிமையான தோட்டக்கலை கூறுகள், புதிய வர்ணம் மற்றும் அதிநவீன விளக்கு அமைப்புகள் என புத்துயிர் பெற்றுள்ளது.

இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி அவர்கள் கூறுகையில், இத்திட்டம் துபாயின் முக்கிய அடையாளங்களை புதுப்பித்து, நகரத்தின் கவர்ச்சி மற்றும் சுற்றுப்புறத்தை மேலும் மேம்படுத்துவதில் குடிமை அமைப்பின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், க்ளாக் டவர் ரவுண்டானாவின் புதுப்பித்தல் பணியை சரியான கால அட்டவணையில் முடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

க்ளாக் டவர் ரவுண்டானாவின் மறுசீரமைப்பு பணியானது, தரைகளை புதுப்பித்தல் மற்றும் பல வண்ண விளக்குகளைப் ஃபவுண்டைனில் பயன்படுத்தி புதிய வடிவமைப்பை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு மேம்பாடுகளை உள்ளடக்கியது.

அதுமட்டுமின்றி, ரவுண்டானாவின் கட்டமைப்பு முழுவதும் வர்ணம் பூசுதல், மற்றும் 3D வடிவமைப்பு போன்ற தனித்துவமான செயல்பாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூடுதலாக, க்ளாக் டவரின் தூண்களுக்கு அருகில் அமைந்துள்ள வாஷிங்டோனியா பாம் மரங்களால் (Washingtonia palms) சுற்றுப்புறங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

இவற்றுடன் ரவுண்டானாவின் புதிய லைட்டிங் அமைப்பில் மேப்பிங் மற்றும் முப்பரிமாண வடிவங்கள், தேசிய விழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் போது பயன்படுத்தக்கூடிய புகைப்படக் காட்சிகள் (photographic displays) போன்றவை புதிதாக அமைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!