ADVERTISEMENT

UAE: வாகனம் ரெட் சிக்னலைத் தாண்டியதால் ஏற்பட்ட விபத்துகளில் 2 பேர் பலி மற்றும் 73 பேர் காயம்..!! துபாய் காவல்துறை அறிக்கை…!!

Published: 4 Sep 2023, 11:06 AM |
Updated: 4 Sep 2023, 11:41 AM |
Posted By: Menaka

அமீரகத்தில் சாலைகளில் ரெட் சிக்னலை மதிக்காமல் தாண்டிச் செல்வது மிகவும் ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதுபோல, கடந்த ஏழு மாதங்களில் ரெட் சிக்னலை மீறியதால் ஏற்பட்ட 51 விபத்துக்களில் இருவர் உயிரிழந்ததாகவும், 73 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நடப்பு ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ரெட் சிக்னலில் வாகனத்தை இயக்கியதற்காக சுமார் 13,875 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டன என்றும் மேலும், ரெட் சிக்னலை தாண்டியதற்காக 855 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பொது போக்குவரத்து துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் என்பவர் கூறுகையில், சாலைகளில் மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்திற்கு மாறுவதற்கு முன்பு, சிக்னலைக் கடந்துவிட வேண்டும் என்று ஏராளமான ஓட்டுநர்கள் வேகமாக ஆக்சிலரேட் செய்வதை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், இந்த நடத்தை சாலையில் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அமீரக மத்திய போக்குவரத்து சட்டத்தின் படி, ரெட் சிக்னலை மீறி தாண்டிச் சென்றால், 1,000 திர்ஹம் அபராதமும், 12 பிளாக் பாயின்ட்களும் விதிக்கப்படுவதுடன் 30 நாள் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கூடுதலாக, துபாயில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி, போக்குவரத்து மீறல்களுக்கு குறிப்பாக, ரெட் சிக்னலைத் தாண்டினாலோ அல்லது பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக வாகனம் ஓட்டினாலோ, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க 50,000 திர்ஹம் செலுத்த வேண்டும் மற்றும் 23 பிளாக் பாயிண்ட்கள் விதிக்கப்படும்.

எனவே, வாகன ஓட்டிகளிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துபாயில் கேமராவில் விபத்துகளை ஏற்படுத்தும் வண்ணம் சென்ற ஓட்டுநர்களின் அதிர்ச்சியூட்டும் எட்டு நிகழ்வுகளின் வீடியோவை காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், வாகன ஓட்டிகள் ரெட் சிக்னலில் வாகனத்தை நிறுத்தத் தவறுவது, போக்குவரத்து சந்திப்புகளில் வாகனங்கள் மீது மோதுவது போன்றவற்றைக் காணலாம். ஆகவே, இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க சாலை விதிகளைக் கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT