அமீரக செய்திகள்

அடுத்தடுத்து கின்னஸ் சாதனைகளை படைக்கும் துபாய்: 19.28 மீட்டர் உயரமுள்ள ஹத்தா சைன் அமைத்து புதிய சாதனை…

துபாய் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து உலக சாதனைகளை படைத்து வருகின்றது. அந்த வகையில் துபாயில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற ஹத்தா மலைத்தொடர் அமீரகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

இங்கு ஹஜர் மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்நிலைகள் என இயற்கை காட்சிகள் மட்டுமில்லாமல், ஏராளமான சாகச மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளும் உள்ளன. இவையனைத்தையும் அனுபவிக்க, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எப்போதும் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். இந்த ஹத்தா மலைத்தொடரில் தான் தற்பொழுது 450 மீட்டர் உயரத்தில் ஹத்தா சைன் டவரை அமைத்து, துபாய் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.

அதாவது ஹத்தாவில் புதிய அடையாளமாக சுமார் 19.28 மீட்டர் உயரமுள்ள ஹத்தா சைன் அமைக்கப்பட்டுள்ளது, இது 13 மீட்டர் உயரமுள்ள ஹாலிவுட் சைன் (Hollywood sign) அடையாளத்தின் சாதனையை முறியடித்து கின்னஸில் இடம்பெற்றுள்ளது.

மேலும், ஹத்தா ரிசார்ட்ஸ் அதன் ஆறாவது சீசனுக்குத் திறக்கத் தயாராகி வருவதால், இப்போது மலையேறுபவர்கள் 30 நிமிட பயணத்தில் மலையின் மேல் சென்று அழகான மற்றும் பிரம்மிப்பான 360 டிகிரி காட்சிகளை ரசிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஹத்தா அடையாளமானது மாலை நேரங்களில் ஒளிரும் என்று துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பார்வையாளர்கள் இங்கு ஜிப்லைன், மவுண்டன் பைக்கிங், ராக் க்ளைம்பிங், சோர்பிங் (zorbing), வில்வித்தை (archery) மற்றும் கோடாரி எறிதல் (axe-throwing) போன்ற வெளிப்புற நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்றும் கூறியுள்ளது.

கூடுதலாக, டிரெய்லர்கள், லாட்ஜ்கள், குவிமாடங்கள் (domes) மற்றும் கேரவன்கள் என தனித்துவமான கிளாம்பிங் அனுபவங்களையும் அனுபவித்து மகிழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே துபாய்வாசிகளுக்கு வார இறுதியில் எங்காவது செல்ல வேண்டும் என்று தோன்றும் இடங்களில் ஹத்தா எப்பொழுதுமே தனி இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!