அமீரக செய்திகள்

அமீரகத்திற்கு 75,000 மெட்ரிக் டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்யும் இந்தியா..!!

இந்திய அரசாங்கம் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில், தற்போது அமீரகத்திற்கு 75,000 டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

மேலும், அமீரகத்திற்கான 75,000 மெட்ரிக் டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (NCEL) மூலம், ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவதாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (Directorate General of Foreign Trade-DGFT) நேற்று (திங்கள்கிழமை, செப்டம்பர் 26) அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்யும் போது, ​​மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்திய அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையிலும், அவர்களின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று DGFT தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, சிங்கப்பூரின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கம் அரிசி ஏற்றுமதிக்கான தடையை நீக்க கடந்த மாதம் முடிவு செய்திருந்தது.

சிங்கப்பூர் மட்டுமின்றி, அமீரகம், நேபாளம், பங்களாதேஷ், சீனா, கோட் டி ஐவரி, டோகோ, செனகல், கினியா, வியட்நாம், ஜிபூட்டி, மடகாஸ்கர், கேமரூன் சோமாலியா, மலேசியா மற்றும் லைபீரியா போன்ற நாடுகளும் இந்தியாவிடம் இருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றன. அவற்றில் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியை பெருமளவில் நம்பியிருக்கிறது.

முன்னதாக, செப்டம்பர் 2022 இல், இந்தியா உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது மற்றும் நெல் பயிரின்விளைச்சல் குறைந்து உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், புழுங்கல் அரிசியைத் தவிர, பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!