அமீரக செய்திகள்

துபாய்: சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த நூற்றுக்கணக்கான பாம் ஜெபல் அலி வில்லாக்கள்.. 18 மில்லியன் திர்ஹம்ஸ் வில்லாவை வாங்க போட்டிபோட்டு கொண்ட ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள்…

துபாயில் இந்த வார தொடக்கத்தில், ரியல் எஸ்டேட் மாஸ்டர் டெவலப்பர் நக்கீல், பாம் ஜெபல் அலி ஐலேண்டில் வில்லாக்கள் விற்பனைக்கு வருவதாக அறிவித்திருந்தது. 13.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த ஐலேண்ட், பாம் ஜுமேராவை விட இரண்டு மடங்கு பெரியதாகும். துபாயில் உள்ள எந்த இடத்திலும் இல்லாத மிக நீளமான கடற்கரையை இது கொண்டுள்ளது.

இந்நிலையில், அந்த வில்லாக்களை வாங்குவதற்காக ரியல் எஸ்டேட் ஏஜென்டுகளும் சொத்து வாங்குபவர்களும் நேற்று (புதன்கிழமை செப்டம்பர் 20) மாஸ்டர் டெவலப்பர் நக்கீலின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களை ஒரு சிலர் வெளியிட்டுள்ளனர்.

அலைமோதும் கூட்டம்:

இவ்வாறு வாடிக்கையாளர் ஒருவருக்காக பாம் ஜெபல் அலியில் வில்லா ஒன்றை வாங்கச் சென்றிருந்த சொத்து முகவரான (Property agent) ஜெஃப் ஸ்டூத் என்பவர், சுஃபூவில் உள்ள நக்கீல் அலுவலத்தின் முன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 19) 8 மணி முதல் புல்வெளியில் நின்று காத்துக் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், அலுவலகத்தின் முன் இருந்த நீண்ட வரிசை பற்றி அவர் கூறுகையில், “அன்று நான் மற்ற ஏழு நண்பர்களுடன் வரிசையில் நின்றேன், காலை 9 மணிக்கு அலுவலகம் திறக்கப்பட்டதும் கூட்டம் அலை மோதின. நான் அதிர்ஷ்டவசமாக, எனது வாடிக்கையாளருக்கு ஒரு வில்லாவை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், என் நண்பர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த தீவில் கிடைக்கக்கூடிய அனைத்து வில்லாக்களும் சில மணிநேரங்களில் விற்றுவிட்டதாக ஏஜென்டுகள் தெரிவித்துள்ளனர். M, N, O மற்றும் P ஆகிய நான்கு திட்டங்களின் யூனிட்கள் விற்பனைக்கு வந்ததாகவும், ஒவ்வொரு ஃப்ரண்டிலும் 109 மற்றும் 165 வில்லாக்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனால் செயற்கையாக கடலில் உருவாக்கப்பட்ட இந்த தீவில் உள்ள வில்லாக்களின் விலை 18 மில்லியன் திர்ஹம்களில் இருந்து தொடங்குவதாகவும், அவை 2027 முதல் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ரியல் எஸ்டேட் முகவர்கள் கூறியுள்ளனர்.

அனைவரும் இப்படி போட்டிபோட்டுக் கொண்டு வாங்குகிறார்கள் என்றால், அந்த ஐலேண்ட் வில்லாக்களில் சிறப்பம்சங்கள் இல்லாமலா இருக்கும்! ஆடம்பர வசதிகள் உற்சாகமளிக்கும் சொகுசு அனுபவங்கள் என  எக்கச்சக்கமான சிறப்பம்சங்கள் இங்கு உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

பாம் ஜெபெல் அலி ஐலேண்டின் சிறப்பம்சங்கள்:

இந்த ஐலேண்டு ஏழு தீவுகள் மற்றும் 16 கிளைகளைக் (frond) கொண்டிருக்கும், இது 80 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் மற்றும் பல தனித்துவமான சில்லறை மற்றும் உணவு அனுபவங்களைக் கொண்டிருக்கும்.

மேலும், இங்கு கோரல் மற்றும் பீச் வில்லாக்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் எட்டு ஸ்டைல்களில் கிடைக்கின்றன. இரண்டு வகையான வில்லாக்களிலும் நீல நிறக்கடலின் பிரம்மாண்ட காட்சிகளோடு கடற்கரையின் அமைதியான சூழலையும் அனுபவிக்கலாம்.

அத்துடன் குடியிருப்பாளர்களுக்கு பரந்த நடைபாதை கொண்ட தெரு, பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு பூங்காக்கள் என பல்வேறு வசதிகளும் உள்ளன. வில்லாக்களின் முன்புறத்தில் பச்சை நிறத்தில் இருக்கும் மரங்கள், இதமான நிழலை வழங்கும். மேலும், பிரத்தியேகமான பிரைவேட் ஃப்ரண்ட் சுற்றுப்புறங்களுக்கு ஏற்ற வகையில், ஆடம்பர வண்ணங்களில் பூச்சுகள் இருக்கும்.

இத்தைகைய ஆடம்பர வில்லாக்களைக் கொண்ட பாம் ஜெபெல் அலி ஐலேண்டின் மாஸ்டர் பிளான், இந்த ஆண்டு தொடக்கத்தில் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!