அமீரக செய்திகள்

துபாயில் அடுத்த மாதம் முதல் இயக்கப்படும் டிரைவர் இல்லா டாக்ஸிகள்!! குடியிருப்பாளர்கள் பயணிக்கலாமா…??

அமீரகத்தில் டிரைவர் இல்லாத வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் முதல் துபாயில் செல்ஃப் டிரைவிங் டாக்ஸிகள் இயங்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

3வது துபாய் உலக செல்ஃப் டிரைவிங் போக்குவரத்திற்கான மாநாட்டின் போது செய்தி ஊடகங்களிடம் பேசிய RTA போக்குவரத்து அமைப்புகளின் இயக்குனர் கலீத் அல் அவாதி , எதிஹாட் அருங்காட்சியகம் மற்றும் துபாய் வாட்டர் கேனல் இடையே 8 கிமீ நீளமுள்ள ஜுமேரா சாலையில் மொத்தம் ஐந்து டிரைவர் இல்லாத டாக்ஸிகள் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி,  இன்னும் செல்ஃப் டிரைவிங் டாக்ஸிகளுக்கான கட்டணத்தை RTA நிர்ணயிக்கவில்லை என்றும், ஆனால் இது துபாயில் உள்ள வழக்கமான டாக்ஸிகளை விட 30 சதவீதம் அதிகமாக இருக்கும் லிமோ டாக்ஸிகளுடன் ஒப்பிடலாம் என்றும் அல் அவாதி குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் மோட்டார்ஸின் (GM) துணை நிறுவனமான, அமெரிக்காவைச் சேர்ந்த செல்ஃப் டிரைவிங் தொழில்நுட்ப நிறுவனமான க்ரூஸால் (Cruise) இயக்கப்படும் இந்த டாக்ஸி, துபாயில் தனது சேவையை தொடர்ந்து சோதனை செய்ய, RTA-வானது அக்டோபர் 1 முதல் ஜுமைரா 1 இல் ஐந்து டிரைவர் இல்லாத டாக்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது.

இறுதிப் பாதுகாப்புச் சோதனைகள் முடியும் டிசம்பர் வரை பயணிகள் வாகனங்களில் பயணிக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துபாய் க்ரீக் முழுவதும் பயணிப்பதற்கான டிரைவர் இல்லா அப்ராக்களிலும் சோதனை நடந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.

இந்த குரூஸ் டாக்சிகள் பல மாதங்களாக வழிகளைக் கற்றுக்கொள்வதற்கும் டிஜிட்டல் மேப்பிங்கைப் புரிந்துகொள்வதற்கும் இயங்கும் என்றும் மேலும், கார்கள் மக்களை அடையாளம் காணவும், அவர்கள் ஆடை அணியும் விதம் போன்றவற்றையும் அடையாளம் காணும் என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர் 2024-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் முழு வணிக பயன்பாட்டிற்காக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அமெரிக்காவை தவிர்த்து டிரைவர் இல்லாத டாக்ஸி மற்றும் இ-ஹெய்ல் (e-hail) சேவைகளின் முழுமையான செயல்பாடுகளுடன் குரூஸ் செல்ஃப் டிரைவிங் டாக்ஸிகளை வணிக ரீதியாக இயக்கும் உலகின் முதல் நகரமாக துபாய் திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!