அமீரக செய்திகள்

2 மாதங்களில் 2.8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்ற ஷார்ஜா விமான நிலையம்!! 2026-ம் ஆண்டுக்குள் விமான நிலையத்தை விரிவுபடுத்த உள்ளதாக தகவல்….

ஷார்ஜா விமான நிலையம் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் 17,700 விமான இயக்கங்கள் மூலம், சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 2.8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்துள்ளதாக ஷார்ஜா விமான நிலைய ஆணையம் (SAA) தெரிவித்துள்ளது.

மேலும், அதிகப்படியான பயணிகளின் வருகையானது, ஷார்ஜா விமான நிலையத்தின் சேவைகள் மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குவதில் பயணிகள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக SAA தெரிவித்துள்ளது.

ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, ஷார்ஜா விமான நிலையத்திற்குப் பயணிக்கும் பயணிகளில் அதிகபட்சமாக தோஹாவிலிருந்து 124,000 பயணிகள் பயணித்துள்ளனர். அதைத் தொடர்ந்து டாக்கா, கெய்ரோ, திருவனந்தபுரம் மற்றும் அம்மான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

குறிப்பாக இந்த நேர்மறையான புள்ளிவிவரங்கள், ஷார்ஜா விமான நிலையத்தை முதல் ஐந்து பிராந்திய விமான நிலையங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதற்கான SAA இன் முயற்சிகளை நிரூபிப்பதாகவும், இது பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்குகிறது என்றும் ஆணையம் கூறியுள்ளது.

அத்துடன் இந்த வளர்ச்சி குறித்து ஷார்ஜா விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அலி சலீம் அல் மிட்ஃபா அவர்கள் பேசுகையில், எதிர்பார்ப்புகளை மீறுவதற்கும், பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்குவதற்கும் SAA தொடர்ந்து பாடுபடுவதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஷார்ஜா விமான நிலையத்தின் வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதில் ஆணையம் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஷார்ஜா விமான நிலையத்தை பிராந்தியத்தின் முதல் ஐந்து விமான நிலையங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டுக்குள் விமான நிலையத்தின் திறனை 20 மில்லியன் பயணிகளாக உயர்த்த பல விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அல் மிட்ஃபா தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!