அமீரக செய்திகள்

50,000-க்கும் மேற்பட்ட விலங்குகளைக் கொண்ட ஷார்ஜா சஃபாரியின் மூன்றாவது சீசன் திறக்கப்படும் தேதி அறிவிப்பு..!!

ஆஃப்ரிகாவிற்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய சஃபாரியான ஷார்ஜா சஃபாரி அதன் மூன்றாவது சீசன் தொடங்கப்படவுள்ள தேதியை சமீபத்தில் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, பல்வேறு உயிரினங்களைக் கொண்டிருக்கும் இந்த சரணாலயம் எதிர்வரும் செப்டம்பர் 21 அன்று திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் இந்த சரணாலயத்தில் பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் மற்றும் விலங்குகள் என பல்வேறு வகையான உயிரினங்களைக் கண்டு ரசிக்கலாம். குறிப்பாக, இங்கு அழிந்துபோன ஆப்பிரிக்க இனமான ஸ்கிமிடார் ஓரிக்ஸ் உட்பட 200-க்கும் மேற்பட்ட விலங்குகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஷார்ஜா சஃபாரி பார்க் செயல்படும் நேரம், டிக்கெட் கட்டணம் போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

விசிட் ஷார்ஜா இணையதளத்தின் படி, இந்த பார்க் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களை வரவேற்கும். இங்கு நடைபயணத்திற்கான டிக்கெட் விலை பெரியவர்களுக்கு 40 திர்ஹமும், குழந்தைகளுக்கு 15 திர்ஹமும் ஆகும். அதேவேளை, சரணாலயம் வழியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், பெரியவர்களுக்கு 120 முதல் 275 திர்ஹம் வரையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சீசன் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையத்தின் (EPAA) தலைவர் ஹனா சைஃப் அல் சுவைதி அவர்கள் பேசுகையில், ஷார்ஜா சஃபாரி பூங்காவில் உள்ள ஆப்பிரிக்க பறவைகள் மற்றும் விலங்குகள் பார்வையாளர்களின் மனத்தைக் கவரும் மற்றும் ஆங்காங்கே உள்ள சதுப்பு நிலங்கள், பள்ளத்தாக்குகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலைகள் போன்ற இயற்கை அங்கத்தின் வழியாகப் பயணிக்கும் போது பார்வையாளர்கள் மறக்கமுடியாத உற்சாகமூட்டும் சாகச அனுபவத்தைப் பெறுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

சரணாலயத்தின் சிறப்பம்சங்கள்:

அல் தைடில் உள்ள அல் பிரிடி ரிசர்வ் பகுதியில் 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள ஷார்ஜா சஃபாரி பார்க்கில் அரிதான மடகாஸ்கர் பாராட்டிலாபியா மீன் இனப்பெருக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பூங்கா சஹேல், சவன்னா, செரெங்கேட்டி, நகோரோங்கோரோ, மோரேமி, கலஹாரி மற்றும் நைஜர் பள்ளத்தாக்கு போன்ற ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளால் ஈர்க்கப்பட்ட 12 சூழல்களைக் கொண்டுள்ளதாக ஷார்ஜா விசிட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசிட் ஷார்ஜாவின் படி, இந்த சரணாலயத்தில் சிங்கங்கள், யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், கருப்பு மற்றும் வெள்ளை காண்டாமிருகம், முதலைகள், மான்கள், காளைகள் மற்றும் பல அழிந்து வரும் விலங்குகள் உட்பட 120 க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன.

அதிலும், ஆப்பிரிக்க விலங்கினங்கள் வேலிகள் இல்லாமல், அவற்றின் இயற்கை சூழலைப் போன்ற சூழலில் சுற்றித் திரிகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!