அமீரக செய்திகள்

UAE: கடல் போக்குவரத்து நெட்வொர்க்கை 188% விரிவாக்கம் செய்வதற்கு ஒப்புதல் அளித்த துபாய் இளவரசர்….

துபாயின் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், கடல் போக்குவரத்து நெட்வொர்க்கை 188% விரிவாக்கம் செய்வதற்கான துபாய் மரைன் டிரான்ஸ்போர்ட் மாஸ்டர் பிளான் 2030 திட்டத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10) ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், கடல் போக்குவரத்தில் பயணிகளின் விகிதத்தை 400 சதவீதம் அதிகரித்தல் மற்றும் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் எலெக்ட்ரிக் அப்ராக்களை உற்பத்தி செய்தல் போன்ற அம்சங்கள் இத்திட்டத்தில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, துபாய் க்ரீக், துபாய் வாட்டர் கேனல், அரேபிய வளைகுடாவின் கடற்கரை மற்றும் பல்வேறு வாட்டர்ஃபிரண்ட் திட்டங்களில் கடல் போக்குவரத்து நிலையங்கள் 48 முதல் 79 நிலையங்கள் வரை அதிகரிக்கும் என்பது இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

இளவரசர் ஷேக் ஹம்தான் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கு (RTA) பார்வையிட சென்ற போது, 2030 ஆம் ஆண்டு வரை துபாயின் கடல் போக்குவரத்து அமைப்பை விரிவாக்குவதற்கான மாஸ்டர் திட்டத்தை மதிப்பாய்வு செய்தார். அத்துடன் RTAவின் இயக்குநர் ஜெனரல் மட்டர் அல் தயர், அவருக்கு திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கியிருக்கிறார்.

3D பிரிண்டட் அப்ரா:

தனியார் துறையுடன் இணைந்து 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் எலக்ட்ரிக் அப்ராவைத் தயாரிக்கும் RTAவின் முன்முயற்சியையும் ஷேக் ஹம்தான் மதிப்பாய்வு செய்தார்.

சுமார் 20 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 3D அப்ரா, அசல் அப்ராக்களைப் போலவே பாரம்பரிய அழகியல் வடிவமைப்புகளுடன் இருக்கும். இந்த முயற்சி, உற்பத்தி நேரத்தை 90 சதவீதம் குறைத்து, 30 சதவீதம் செலவை மிச்சப்படுத்துவதாகவும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அல் கர்ஹூத் RTA மரைன் மெயிண்டனன்ஸ் சென்டரின் செயல்பாட்டு அளவீடுகள் மற்றும் செயல்திறனையும் ஷேக் ஹம்தான் அவர்கள் மதிப்பாய்வு செய்திருக்கிறார். கப்பல்களுக்கான ஒர்க் ஷாப் முதன்முதலில் 2018 இல் தொடங்கப்பட்டதில் இருந்து, 57 RTA கப்பல்கள் உச்ச செயல்திறனுடன் இயங்குவதற்கு உதவியிருப்பதாக மதிப்பாய்வின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே கணித்து திட்டமிடுதல்:

கடல் போக்குவரத்து முறைகளுக்கான முன்கணிப்பு பராமரிப்பு அமைப்பில் ரிமோட் மானிட்டரிங் சாதனங்கள் மற்றும் சென்சார்களை கடல் போக்குவரத்து முறைகளில் நிறுவுவது தொடர்பாகவும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது

தானியங்கு எலெக்ட்ரிக் அப்ரா:

உலகின் முதல் தானியங்கு எலெக்ட்ரிக் அப்ராவின் (autonomous electric abra) சோதனை ஓட்டம் குறித்தும் ஷேக் ஹம்தானுக்கு தெரிவிக்கப்பட்டது. அதாவது, அல் ஜதாஃப் நிலையம் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மரைன் டிரான்ஸ்போர்ட் ஸ்டேஷன் ஆகியவற்றுக்கு இடையே கேப்டன் இல்லாமல், 100 சதவீத துல்லியத்துடன் பாதையை கடைபிடித்து, அப்ராவை முழுவதுமாக தன்னாட்சியாக இயக்கும் சோதனை நடத்தப்பட்டது பற்றி அல் டேயர் அவரிடம் விவரித்துள்ளார்.

குறிப்பாக அதன் ஆரம்ப கட்டத்தில், சாத்தியமான ஆறு நிலைகளில் இருந்து சர்வதேச டிரைவிங் ஆட்டோமேஷன் குறியீட்டின் நிலை 4 ஐ அப்ரா வெற்றிகரமாக கடந்துள்ளதாகவும், அடுத்த கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்குள் குறியீட்டின் 5 ஆம் நிலையை வெற்றிகரமாக முடிப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த எலெக்ட்ரிக் அப்ராக்கள் கார்பன் உமிழ்வுகள் இல்லாதவை மற்றும் டீசலில் இயங்கும் அப்ராக்களுடன் ஒப்பிடும்போது சப்தம் இல்லாமல் இயங்குதல் ஆகியவற்றால் உயர்த்தப்பட்ட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் எமிராட்டி பெண் கேப்டன்:

RTAவின் பல்வேறு முன்முயற்சிகளையும் மதிப்பாய்வு செய்து கொண்டிருந்த ஷேக் ஹம்தான் அவர்கள், ஹனாதி முகமது அல் டோசேரி என்ற எமிராட்டி பெண் கேப்டனை சந்தித்துள்ளார். இவர் ஒரு கடல் போக்குவரத்து கப்பலுக்கு கேப்டனாக இருந்த முதல் எமிராட்டி பெண்மணி ஆவார். கேப்டன் அல் டோசெரி கடல்வழிப் போக்குவரத்தில் 200 டன் எடையுள்ள கப்பல்களை இயக்குவதற்குத் தேவையான தகுதிகளைப் பெறுவதற்காக, தான் கடந்து வந்த பயணங்கள் பற்றி ஷேக் ஹம்தானிடம் விவரித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு நாட்டின் பல்வேறு துறைகளிலும் சிறந்த முன்னுதாரணமாக விளங்கும் எமிராட்டி பெண்களுக்கும், அவர்களின் அயராத முயற்சிக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஷேக் ஹம்தான் கூறியுள்ளார். அத்துடன் அல் டோசெரி அவரது வாழ்க்கையில் மென்மேலும் வெற்றி பெற்று உயரத்தை அடைவதற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!