அமீரக செய்திகள்

அமீரக அரசின் புதிய கட்டுப்பாடு.. 2024 முதல் குறிப்பிட்ட எடைக்கு மேல் உள்ள கனரக வாகனங்களுக்கு தடை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றாக அமரீக சாலைகளில் 65 டன் எடையுள்ள கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமீரக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களின் எடையைக் கட்டுப்படுத்தும் கூட்டாட்சி சட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும், இந்தத் தடைச் சட்டம் எதிர்வரும் 2024இல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் அமீரகத்தின் மேம்பட்ட உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதுமே இதன் இலக்கு என்று அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் கூறியுள்ளார்.

எனவே, இனி கனரக வாகனங்களின் எடை மற்றும் பரிமாணங்களை அளவிடவும் கண்காணிக்கவும் சாலைகளில் ஸ்மார்ட் எலக்ட்ரானிக் கேட் அமைப்பு நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஊழியர்களுக்கு ரிவார்ட்ஸ் சிஸ்டம், தொழிலாளர் புகார் அமைப்பு உள்ளிட்டவற்றிலும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

வெகுமதி அமைப்பு (Rewards system)

மத்திய அரசின் ஊழியர்களுக்கு ரிவார்டு மற்றும் ஊக்கத்தொகை (incentive) வழங்குவதற்கான புதிய முறையையும் ஷேக் முகமது அறிவித்துள்ளார். அந்த வகையில், ஊழியரின் வருடாந்திர செயல்திறன், துறைரீதியான சாதனைகள் மற்றும் மாநில அளவிலான சாதனைகள் ஆகிய மூன்று வகைகளுக்கான ஊக்கத் தொகைகள் அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் புகார் அமைப்பு:

அமீரகத்தின் தொழிலாளர் புகார் அமைப்பு சட்டத்தின்படி, மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) உரிமை கோரலின் மதிப்பு 50,000 திர்ஹம்ஸை தாண்டாத தொழிலாளர் தகராறுகள் தொடர்பான முடிவுகளை வெளியிடுவதற்கு பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் நீர்:

அமைச்சரவைக் கூட்டத்தின் போது, அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் மின்சாரம் மற்றும் நீர் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீர் மற்றும் மின்சாரத்திற்கான மத்திய ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது அமீரகத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தின் (Ministry of Energy and Infrastructure) கீழ் செயல்படும் என்று ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய சட்டங்களுடன் இ-காமர்ஸ், மீடியா, விண்வெளித் துறை மற்றும் மனித மரபணு பயன்பாடு உள்ளிட்ட 11 புதிய கூட்டாட்சி சட்டங்களையும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!