ADVERTISEMENT

UAE-இந்தியா: செப்டம்பர் 14க்குப் பிறகு விமானக் கட்டணம் 15-30% குறையும் என தகவல்..!!

Published: 5 Sep 2023, 3:58 PM |
Updated: 5 Sep 2023, 4:15 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு அமீரகவாசிகள் பலர் தங்களின் சொந்த ஊருக்கும் பின்னர் கோடை விடுமுறை முடிந்ததும் மீண்டும் சொந்த ஊரிலிருந்து அமீரகத்திற்கும் பயணிப்பது பொதுவாகவே நடைமுறையில் உள்ளதாகும். இதனால் இந்த சமயங்களில் விமான கட்டணமும் முக உயர்ந்து காணப்படும். இந்தியாவில் இருந்து அமீரகம் திரும்பும் பல இந்தியர்கள் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பு காரணமாக, தங்கள் பயணத் திட்டங்களை ஒத்தி வைத்திருந்தனர்.

ADVERTISEMENT

விமான டிக்கெட்டுகளின் விலையானது, சாதாரண நாட்களுடன் ஒப்பிடும்போது, கோடை விடுமுறை சீசனில் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உச்சத்தை எட்டியிருந்தது. இந்த சமயங்களில், அமீரகத்தில் இருந்து இந்தியா செல்வதற்கான டிக்கெட் விலை 1,800 திர்ஹம் முதல் 2,600 திர்ஹம் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சுமார் மூன்று மாதங்களாக உச்சத்தில் இருந்த விமான டிக்கெட்டுகளின் விலை தற்போது, 15-30 சதவீதம் குறைக்கப்பட உள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமீரகம், இந்தியாவிற்கு இடையே செல்வதற்கான விமான டிக்கெட்டின் விலை செப்டம்பர் 14க்குப் பிறகு குறையும் என்றும் நவம்பர் 1 வரை நிலையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இப்போது குறையும் இந்த கட்டணங்கள், மீண்டும் பண்டிகைக் காலம் மற்றும் புத்தாண்டு காரணமாக 2024 ஜனவரி இரண்டாவது வாரம் வரை உயர்ந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், சுற்றுப்பயணத்திற்கான (roundtrip) கட்டணம் தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தாண்டின் நான்காம் காலாண்டு நெருங்கி வருவதால், அமீரகத்தில் வரவிருக்கும் குளிர்காலம் மற்றும் பிஸியான பண்டிகைக் காலம் உட்பட பல காரணிகளால் அமீரகத்தின் உள்வரும் போக்குவரத்தில் அதிகரிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அமீரகத்திற்கு வரும் பயணிகளுக்கான முன்னணி மூல சந்தையாக உள்ள இந்தியாவில் இருந்து ஏராளமானோர் அமீரகத்தை நோக்கி பயணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தற்பொழுது அமீரகத்திற்கு வரும் பயணிகளின் போக்குவரத்து 28 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் துபாய், 1,223,000 பயணிகளை வரவேற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.