அமீரக செய்திகள்

துபாய் வெயிலில் குளுகுளுன்னு நடந்து செல்ல குளிர்விக்கும் குடைகள் வாடகைக்கு!! குடியிருப்பாளர்கள் இலவசமாக பெறலாம் என தகவல்..

வளைகுடா என்று சொன்னாலே பொதுவாக அனைவரின் நினைவிற்கும் வருவது இங்கு சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் கோடைகாலத்தில் அடிக்கும் அதிகமான வெயிலால் மதிய நேரங்களில் தொழிலாளர்கள் திறந்த வெளியில் வேலை செய்ய கூட தடை விதிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் இந்த பகுதிகளில் பொது வெளியில் செல்பவர்களுக்காக வேண்டி அவர்களுக்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்க புதிதாக குளிர் குடைகள் எனும் தயாரிப்பானது ஒரு நிறுவனத்தால் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

UmbraCity என்ற கனேடிய நிறுவனம் ஒன்று கோடை வெயிலின் போது, 6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைக் குறைக்க குளிர்விக்கும் குடை என்ற அற்புதமான தீர்வை வெளியிட உள்ளது. குறிப்பாக, அமீரகம் உட்பட வெயில் கடுமையாக சுட்டெரிக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.

எனவே, கூடிய விரைவில் துபாய் குடியிருப்பாளர்கள் கொளுத்தும் வெயிலில் தங்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த குடையை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். முதன்முதலில் வாடகைக்கு எடுக்கும் போது  24 மணி நேரம் வரை நீங்கள் இவற்றை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.

இது தொடர்பாக அம்ப்ராசிட்டியின் நிறுவனர் அமீர் என்டெசாரி அவர்கள் பேசுகையில், துபாயில் கடுமையான வெயிலை எதிர்கொள்ள குளிர்ச்சியூட்டும் வாடகைக் குடைகள் சிறந்த வழியாகும் என்று துபாயில் உள்ள நண்பர்கள் கூறியதாகவும், இதைத் தொடங்க துபாய் சரியான இடம் என்று அவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், துபாயில் மக்கள் வெயிலைச் சமாளிக்க இந்த குளிரூட்டும் குடைகள் வெப்பத்திலிருந்து காப்பாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, கனடாவில், கோடை மற்றும் மழையின் போது பொதுமக்கள் பயன்படுத்த அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் போக்குவரத்து நிலையங்களில் குடை கியோஸ்க்குகள் வைக்கப்படுவதாகவும் அமீர் தெரிவித்துள்ளார்.

UV பாதுகாப்பை வழங்கும் குடைகள்:

இந்த நவீன குடைகள் மறுசுழற்சி செய்யப்பட்ட மற்றும் நிலையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதாகக் கூறிய அமீர், இவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவை வெப்பநிலையைக் குறைப்பதுடன் சூரியக் கதிர்களில் இருந்து வெளிப்படும் அபாயகரமான UV கதிர்வீச்சுகளில் இருந்தும் மனிதர்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, குடைகள் பழையதாகிவிட்டால், அவை வீணாகப் போவதில்லை. ஏனெனில் நிறுவனம் அவற்றை மறுசுழற்சி செய்து, மளிகைப் பைகள் போன்ற பயனுள்ள பொருட்களாக மாற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீர் வெளியிட்ட தகவல்களின் படி, இந்த குடைகளில் ஸ்மார்ட் சிப் பொருத்தப்பட்டுள்ளன. இது கியோஸ்கில் உள்ள குடையைத் திறக்கவும், பயன்பாட்டின் கால அளவையும் ஆப்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள பயனர் விவரங்களையும் கண்காணிக்க உதவும்.

வாடகைக்கு எடுப்பது எப்படி?

குடியிருப்பாளர்கள் முதலில் கியோஸ்க் அல்லது ஆப்ஸ் மூலம் கணக்கைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர், ஆப் அல்லது கியோஸ்க் மூலம் குடையை அணுகலாம். நீங்கள் எடுத்த முதல் 24 மணிநேரத்திற்கு குடையை இலவசமாக பயன்படுத்தலாம், அதன் பிறகு, சிறிய கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒருவேளை, குறிப்பிட்ட நேரத்திற்குள் குடைகளை திருப்பித் தரப்படாவிட்டால், பயனரின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு ஆப்ஸ் வாலட்டில் சேமிக்கப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!