அமீரக செய்திகள்

துபாய் மிராக்கிள் கார்டன் செல்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சிறப்பு சலுகை அறிவிப்பு..!!

உலகின் மிகப்பெரிய மலர்த் தோட்டமான துபாய் மிராக்கிள் கார்டன் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதன் 12வது சீசனில் அடியெடுத்து வைத்தது. சுமார் 72,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 150 மில்லியனுக்கும் அதிகமான மலர்களால் மூடப்பட்ட வடிவமைப்புகளும் சிற்பங்களும் நிரம்பியுள்ளன.

குறிப்பாக, இங்கு கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் எமிரேட்ஸ் ஏர்பஸ் A380 வடிவத்தில் உள்ள மலர் சிற்பம் பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், 100,000 செடிகள் மற்றும் மலர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட 18 மீட்டர் மிக்கி மவுஸ், இதய வடிவிலான மலர் சுரங்கங்கள் மற்றும் மிகப்பெரிய வாட்டர் வீல் போன்றவை பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்திருக்கின்றன.

புதிய சீசனுக்கான டிக்கெட் விலைகள்:

  • பெரியவர்களுக்கு: 95 திர்ஹம்
  • மூன்று முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு: 80 திர்ஹம்
  • மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு – இலவச அனுமதி

டிக்கெட் கட்டண சலுகை

அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மிராக்கிள் கார்டன் செல்ல பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது. அதாவது மிராக்கிள் கார்டனுக்கு செல்பவர்கள் 95 திர்ஹம்ஸ் கட்டணத்திற்கு பதிலாக 65 திர்ஹம்ஸ் கட்டணத்தில் செல்லலாம்  என கூறப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற டிக்கெட் செலுத்தும் இடத்தில் எமிரேட்ஸ் ஐடியை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். மேலும் இந்த தள்ளுபடியானது மிராக்கிள் கார்டன் நுழைவாயிலில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் எமிரேட்ஸ் ஐடியை வாயிலில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் நுழைவு இலவசம் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் (People of Determination) POD கார்டை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் மாற்றுத் திறனாளியுடன் வரும் ஒருவருக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும்.

டிக்கெட்டுகளை எப்படிப் பெறுவது?

நீங்கள் நேரடியாக துபாய் மிராக்கிள் கார்டனில் உள்ள கவுன்டரில் டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லது ஆன்லைனில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் – https://www.dubaimiraclegarden.com/visitors-info/.

இணையதளத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான படிகள்:

  1. மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து, ‘Book now’ என்ற பட்டனைத் தட்டவும்.
  2. அதையடுத்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் எண்ணிக்கை மற்றும் தேதி போன்றவற்றை தேர்ந்தெடுத்து, ‘proceed to book’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பின்னர், உங்களின் Google அல்லது Facebook கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைந்து, உங்கள் தொடர்பு விவரங்கள் மற்றும் பில்லிங் முகவரியை உள்ளிடவும்.
  4. அடுத்தபடியாக, உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்துங்கள்.
  5. இறுதியாக, உங்கள் மின்னஞ்சல் முகவரியில் டிக்கெட்டுகளுடன் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

இடம்:

துபாய் மிராக்கிள் கார்டன் அல் பர்ஷா சவுத் பகுதியில், துபாய்லாண்ட் ஸ்ட்ரீட் 3 இல், ஷேக் முகமது பின் சயீத் சாலை (E311) மற்றும் உம் சுகீம் சாலை (D63) ஆகியவற்றின் கிராஸ்-செக்சனில் அமைந்துள்ளது.

துபாய் மிராக்கிள் கார்டனுக்கு எப்படி செல்வது?

நீங்கள் பொதுப் போக்குவரத்தில் துபாய் மிராக்கிள் கார்டனுக்கு செல்கிறீர்கள் என்றால், முதலில் மெட்ரோ ரெட் லைனில் உள்ள மால் ஆஃப் எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்திற்கு மெட்ரோவில் பயணிக்க வேண்டும். அடுத்து, அங்கிருந்து துபாய் மிராக்கிள் கார்டனுக்கு பேருந்து எண். 105 இல் செல்ல வேண்டும்.

மாறாக, நீங்கள் உங்களது சொந்த வாகனத்தில் செல்கிறீர்கள் என்றால், அல் பர்ஷாவின் திசையில் E311 நெடுஞ்சாலையை எடுத்து , துபாய் மிராக்கிள் கார்டனுக்கான சைன்போர்டுகளைப் பின்பற்றி எக்ஸிட்30இல் வெளியேறவும்.

செயல்படும் நேரம்:

  • வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை): காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
  • வார இறுதி நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு): காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை

துபாய் பட்டர்ஃப்ளை கார்டன் (Dubai Butterfly Garden)

நீங்கள் துபாய் மிராக்கிள் கார்டனுக்கு சென்றால், ​​அதன் அருகில் அமைந்துள்ள துபாய் பட்டர்ஃப்ளை கார்டனையும் பார்க்கலாம். அங்குள்ள பத்து குவிமாடங்கள் (dome) ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் படபடத்துக் கொண்டிருக்கும் அழகை ரசிக்கலாம்.

துபாய் பட்டாம்பூச்சி தோட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட வகைகளில் இருந்து சுமார் 15,000 பட்டாம்பூச்சிகள் உள்ளன. இதற்கு நீங்கள் தனியாக டிக்கெட் வாங்க வேண்டும்.

மேலும்,  டிக்கெட் விலைகள் 55 திர்ஹம்களில் இருந்து தொடங்குகிறது. எனவே, உங்கள் டிக்கெட்டுகளை நேரடியாக கார்டனில் அல்லது dubaibutterflygarden.com என்ற லிங்க் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். பூங்கா சனிக்கிழமை முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!