ADVERTISEMENT

பயண ஆவனங்கள் இல்லாமல் துபாய் ஏர்போர்ட்டில் நடைமுறைகளை முடிக்க புதிய ஸ்மார்ட் டெக்னாலஜி.. விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள துபாய்..!!

Published: 20 Oct 2023, 7:07 PM |
Updated: 20 Oct 2023, 7:48 PM |
Posted By: Menaka

துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்ய பல நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக பயணிகள் கூடிய விரைவில், பாஸ்போர்ட், விசா அல்லது பயண ஆவணங்கள் என எதுவுமின்றி விமான பயணத்தை அனுபவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதாவது, துபாய் விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகள் செக்-இன் கவுன்டர்களில் தங்களின் ஆவணங்களை காண்பிப்பதற்கு பதிலாக கேமராவில் முகத்தைக் காட்டுவதன் மூலம் இந்த தடையற்ற பயணத்தை அனுபவிக்க முடியும் என இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் தொடங்கப்பட்ட Gitex Global என்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் துபாயில் கூடிய விரைவில் வரவிருக்கும் பல்வேறு நவீன திட்டங்கள் குறித்து செய்தி வெளியிடப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றாக கடந்த 16 ஆம் தேதி கலந்து கொண்ட ‘Emaratech’ நிறுவனம், விமான நிலையத்தில் ஸ்மார்ட் தொழில்நுட்பத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு GDRFA-துபாயுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து எமார்டெக்கில் உள்ள தடையற்ற செக்-இன் சேவைக்கான தயாரிப்பு மேலாளர் அஹ்மத் பஹா விவர்க்கையில், பயணிகள் விமான நிலையத்தை வந்தடையும் போது, ​​அவர்கள் பயணித்த விமானம் மற்றும் அவர்களது விசா பற்றிய விவரங்கள் அதிகாரிகளின் கணினியில் தானாகவே பதிவேற்றப்பட்டு, பின்னர் அவர்கள் செக்-இன் கவுண்டர்களுக்கு வரும்போது கணினியில் உள்ள அவர்களின் புகைப்படம் மூலம் பயணிகளின் முக அம்சங்கள் ஸ்கேன் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன், அதையடுத்து அவர்கள் இமிக்ரேஷன் கவுண்டருக்கு செல்வதற்குப் பதிலாக நேரடியாக ஸ்மார்ட் கேட்டிற்குச் செல்லலாம், அங்கும் பயணிகள் எந்தவிதமான பயண ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்களின் புகைப்படம் மற்றும் முக அடையாளமே ஸ்மார்ட் கேட்டை கடப்பதற்கு தேவையான சான்றுகள் ஆகும்.

இதே செயல்முறை போர்டிங் கேட்டிலும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, துபாய் விமான நிலையத்தின் இமிக்ரேஷன் கவுண்டரில் ஸ்மார்ட் கேட் உள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பம் எவ்வளவு விரைவில் வெளியிடப்படும் என்பது குறித்த தகவலை அஹம்மது வெளியிடவில்லை.

அதுமட்டுமில்லாமல், செக்-இன் மற்றும் போர்டிங் கேட் தொடர்பாக, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், துபாய் விமான நிலையம் மற்றும் இமிகிரேஷன் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், விமான நிலையங்களில் விரைவில் நீங்கள் அதைப் பார்க்க முடியும் என்றும் அகம்மது தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இதேபோன்ற பயோமெட்ரிக் செக்-இன் முறையின் முதல் கட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் பயணிகள் போர்டிங் பாஸ் மற்றும் அவர்களின் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மற்ற சேவைகளைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel