அமீரக செய்திகள்

குடியிருப்பாளர்களுக்காக துபாய் RTA அறிமுகப்படுத்தும் 5 புதிய ஆன்லைன் சேவைகள்.. பயணத்தை எளிதாக்க முயற்சி..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பொதுப் போக்குவரத்துப் பயனர்களின் பயணத்தை எளிதாக்கவும், துபாய் எமிரேட்டில் உள்ள காலியான பார்க்கிங் இடங்களை கண்டறியவும் மற்றும் கார் நம்பர் பிளேட்டுகளின் உரிமையை ஆன்லைனிலேயே மாற்றவும் ஐந்து புதிய சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் RTAவின் இந்த புதிய சேவைகளில், பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்கள் டிக்கெட், பணம் அல்லது நோல் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் எடுப்பதற்கு பதிலாக, முகத்தைக் காட்டியதும் பயணிகளின் கணக்கில் இருந்து கட்டணம் கழிக்கப்படும் தொழில்நுட்ப திட்டமும் அடங்கும்.

அத்துடன், துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் நடைபெற்று வரும் GITEX Global 2023 என்ற தொழில்நுட்பக் காண்காட்சியில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் metaverse தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல புதிய சேவைகளையும் RTA காட்சிப்படுத்தியுள்ளது.

அவ்வாறு துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்காக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) விரைவில் அறிமுகப்படுத்தும் ஐந்து புதிய ஆன்லைன் சேவைகள் பற்றிய விபரங்களை இங்கே பார்க்கலாம்.

1. மொபைலில் டிஜிட்டல் நோல் கார்டை அணுகுதல்:

RTA சாம்சங் போன்களுக்கான டிஜிட்டல் நோல் கார்டுகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு முன்னதாக, Huawei ஃபோன்களில் உள்ள ‘nol Pay’ செயலியுடன் மட்டுமே டிஜிட்டல் நோல் கார்டை அணுக முடியும். இனி குடியிருப்பாளர்கள் Apple, Android மற்றும் Huawei சாதனங்களுக்குக் கிடைக்கும் ‘nol Pay’ ஆப் மூலம், பின்வரும் சேவைகளை அணுகலாம்:

  • நோல் கார்டு தகவலை எளிதாக சரிபார்க்கலாம்
  • நோல் கார்டை டாப்-அப் செய்யலாம்
  • ‘நோல் பிளஸ்’ லாயல்டி திட்டத்தை அணுகலாம்
  • பொதுப் போக்குவரத்திற்கு மட்டுமின்றி பல சேவைகளுக்கு பணம் செலுத்த நோல் கார்டை பயன்படுத்தலாம்
  • டாப்-அப் அல்லது தள்ளுபடி ஷாப்பிங் வவுச்சர்களாக உங்கள் நோல் கார்டின் லாயல்டி பாய்ண்ட்களை பயன்படுத்தலாம்
  • உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட அனைத்து கார்டுகளையும் நிர்வகிக்கலாம்

2. முக அடையாளத்துடன் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை செலுத்துதல்:

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வெகுவிரைவில் பயணிகள் துபாய் மெட்ரோ, துபாய் டிராம், பேருந்துகள் மற்றும் அப்ரா போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளுக்கு தங்கள் முக அங்கீகாரம் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். இதனால், பயணிகள் டிக்கெட், நோல் கார்டுகள், பணம் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லாமல் போய் விடும்.

இதற்கு முதல்கட்டமாக, துபாய் மெட்ரோ, துபாய் டிராம், பேருந்துகள் மற்றும் அப்ரா சேவைகளில் ஸ்மார்ட் கேட்கள் நிறுவப்படும், அவை பயணிகளை பதிவுசெய்து கேமராக்களைப் பயன்படுத்தி முகத்தை அடையாளம் கண்டு, 3Dயில் ஸ்கேன் செய்து, பயணியின் பயோ டேட்டாவுடன் முகம் பொருந்தியவுடன் கணக்கிலிருந்து கட்டணத் தொகை கழிக்கப்படும். எனினும் இந்த சேவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவலை ஆணையம் வெளியிடவில்லை.

3. பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு டாக்ஸி:

RTAவின் துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC) வழங்கும் ‘In Safe Hands’ சேவையானது, துபாய் பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளை அழைத்து வர சிறப்பு டாக்சிகளை முன்பதிவு செய்ய பெற்றோரை அனுமதிக்கிறது. கூடவே, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல DTC டாக்ஸியில் ஒரு பாதுகாவலரை நியமிக்கும் விருப்பமும் பெற்றோர்களுக்கு உள்ளது. மொபைலில் DTC ஆப்-ஐ டவுன்லோட் செய்து, இந்த சிறப்பு டாக்ஸியை முன்பதிவு செய்யலாம்.

4. ஆன்லைனில் காலியான பார்க்கிங் இடங்களைத் தேடுதல்:

நீங்கள் ஒரு இடத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, ‘துபாய் டிரைவ் (Dubai Drive)’ அப்ளிகேஷனில் நீங்கள் சேருமிடத்திற்கு அருகில் உள்ள காலியான பார்க்கிங் இடங்களைத் தேடி கண்டுபிடிக்கலாம். ஏற்கனவே, ‘Search for Parking’ என்ற சேவை செயலியில் உள்ளது, இருப்பினும் RTA பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது:

  • மாற்றுத் திறனாளிகளுக்கான பார்க்கிங்
  • எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பசுமையான பார்க்கிங்
  • பல மாடி பார்க்கிங் இடங்கள்
  • கார் கழுவும் சேவைகள்

5. நம்பர் பிளேட்டுகளின் உரிமையை ஆன்லைனில் மாற்றுதல்:

GITEX Global கண்காட்சியின் போது, RTA ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு சேவையானது ‘துபாய் டிரைவ் (Dubai Drive)’ ஆப் மூலம் வாகன நம்பர் பிளேட்டுகளின் உரிமையை மாற்றுவதற்கான ஆன்லைன் சேவையாகும். இந்த ஆப் வழியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் UAE Pass அப்ளிகேஷனை பயன்படுத்தி விற்பனை நடைமுறைகளை முடிக்கலாம்.

இது RTAவின் சேவை மையங்கள் எதையும் பார்வையிட வேண்டிய தேவை இல்லாமல், ஸ்மார்ட் ஆப் மூலம் பரிவர்த்தனையை முடிக்கவும், விற்பனை நடைமுறைகளை பாதுகாப்பாக முடிக்கவும் மற்றும் மின் கையொப்பத்தைப் பயன்படுத்தி விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!